பிறந்த இடத்தை நோக்கி, நீண்ட பயணம்!

Standard

பறவைகள், விலங்கினங்கள், பூச்சியினங்கள் போன்ற பலவும் மனிதனுக்கு வாழ்வியல் கற்றுத்தருகிறது. சில ஞானம் போதிக்கிறது. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்- என்ற பாடல் வரிகளைப் போல் மனிதனின் எத்தனையோ படைப்புகளின் பின்னால் பறவை, விலங்கினம், பூச்சியினம் போன்றவை வழிகாட்டியாக அமைந்ததுண்டு. சமூக கட்டமைப்பை, எடுத்துக்கூறும் எறும்புகளின் வாழ்வியல். அதேபோல் தேனீக்களின் உழைப்பு. இப்படி எத்தனையோ பூச்சியினங்கள் கூட, நமக்கு வழிகாட்டும் தகுதி பெற்றவையே.

பூமியில் 10 இலட்சம் மேலான விலங்கின வகைகள் நம்மோடு இணைந்து வாழ்வதாக உத்தேச கணிப்பு உள்ளது. இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி உயிரின வகைகள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. எந்த ஒரு சிறு உயிரினமும் இந்த பூமியின் உயிர்ப்போடு ஒன்றியினைந்ததுதான். நமக்கு இருக்கும் உரிமை அவற்றுக்கும் உண்டு. நமது முன்னோர்களை விட அவற்றின் முன்னோர்கள் பழமையானவர்கள். மனிதகுலத்திற்கு முன்பாக இப்பூமியில் பிறப்பெடுத்தவர்கள்.

உயிரினங்களில் எதுவும் ஏற்றதாழ்வு இல்லை. யாதொன்றின் வாழ்வும் இப்பூமியின் நன்மையிலேயே முடிகிறது. இன்று வெகு வேகமாக அழிவைச் சந்துத்து வரும் இனங்களில் ஒன்று, பறவையினம்.

இப்பூமி முழுதும் பசுமை படர்ந்துவிரிய பறவையினமே, முக்கியக்காரணம். சிறு புழு, பூச்சியினங்களை பூமியில் கட்டுப்படுத்தும் வல்லமை பறவையினங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். இதுவரை 9672 பறவையினங்கள் உள்ளதாக பறவையியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். சில பறவைகள் பறக்கும் சக்தியை இழந்துவை. குறிப்பாக பென்குயின், தீக்கோழி, கிவி மற்றும் அழிந்துபோன டோடோ போன்றவை அப்படிப்பட்ட பறக்காத பறவைகள். பறவைகளின் உள்ளமைப்பே ஓர் மாறுபட்ட கலவையாகும். முதுகெலும்புள்ள இவை, பாலூட்டிகளைப் (Mammals) போல நான்கு அறை இதயத்தையும், வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. ஆனால் ஊர்வன (Reptiles) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. கூடுதலாக மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளில் இல்லாத ஹைபர்ஸ்ட்ரியாடம் (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உண்டு. பறவைகள் எவ்வளவு பறந்தாலும் அதற்கு வியர்க்காது. ஏனென்றால் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.

பயணமே பறவைகளின் அடையாளம். பறவைகளில் பல மேப் இல்லாமல் வான்வெளியில் பல்லாயிரம் மைல்கள் கடந்து இலக்கை நோக்கி வந்து செல்கின்றன. வாழ்நாள் முழுதும் ஆண்டுதோறும் இத்தகைய நீண்ட பயணங்கள் நடைப்பெறுகிறது. இதனை வலசை என்பர். அதன் இந்த பயணம் தலைமுறை தலைமுறையாக தொடருகிறது.

கூட்டிலடைத்து வளர்க்கப்படும் பறவைகளுக்கும், புலப்பெயர்வு உள்ளுணர்வால் உந்தப்படுதல் கண்டறியப்பட்டுள்ளது. பறக்கவிடும்போது, இவையும் புலப்பெயர்வின்போது பறக்கும் அதே திசையிலேயே பறக்க முயல்கின்றனவாம்.

வாழ்வில் பெரும்பகுதியைப் பறவைகள் இரை தேட, செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் உணவை உடலில் சேமித்து வைக்க இயலாது. அடிக்கடி உண்ணும் அவசியம் ஏற்படுகிறது. இவ்வினத்திலும் சைவம், அசைவம் உண்டு. மனிதனைப்போல் இரண்டையும் உண்ணும் பறவைகளும் உண்டு. எளிய உதாரணம் காக்கை. சில பறவைகள் குறிப்பிட்ட இரையை மட்டுமே உண்ணும். எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். நத்தையினம் முழுமையாக அழிந்தால், இப்பறவையினமும் பூமியில் இருந்து முழுதும் முடிந்துவிடும். இப்படி சில பூச்சியினங்களைச் சார்ந்து, சில பறவை இனங்கள் வாழ்கின்றன.

பறவைகளின் வாழ்க்கை அபூர்வங்கள் பல நிறைந்தவை. ஆகாயம், நிலம், நீர் என மூன்றிலும் பயணிக்கும் சக்தி, சில பறவைகளுக்கு உண்டு. மீன்வேட்டை செய்யும் பல வகைப் பறவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். குளம் குட்டைகள் அதைச் சார்ந்த சிறுகாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதால் மீன்கொத்தி போன்றவை வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன. இனப்பெருக்கமும் குறைந்துவருகிறது.

ஹம்மிங்கு ( Humming ) பறவை யாரையும் ஈர்க்கும் சக்திக்கொண்டது. தமிழில் தேன் சிட்டு என அழைப்பர். இதன் முக்கிய உணவு தேன். இப்பறவை மணிக்கு 27 மைல் வேகத்தில் பறப்பதோடு மட்டுமல்லாது, வலம், இடம், மேல், கீழ், பின்னோக்கி, தலைகீழாக பறக்க முடியும். அப்படியே சட்டென அந்தரத்தில் பறந்தபடி நிற்கமுடியும். இந்த பறவை ஒரு நெடியில் 80 தடவை இறக்கைகளை அசைக்ககூடியது. அதனால் அதன் இறகசைவு நம் கண்களில் புலப்படாது. மற்ற பறவைகள் போல் நடக்கவோ தத்துவோ தெரியாவை. இப்பறவைக்கு ரசிகர்கள் உலகமுழுதும் உண்டு. இப்பறவையின் புகழ்பாட இணைய தளங்கள் பல உள்ளன. ஆனால் வாழுவதற்கு நந்தவனங்கள்தான் குறைந்துவிட்டன.

 மற்றொரு அபூர்வமான பறவை ஆந்தை. பகலில் பார்வைக்கோளாறு கொண்டவை. இரவில் வேட்டையாடும் தன்மைக்கொண்டது. ஓரே இரவில் மூன்று முழு எலிகளை முழுசாக உண்ணும் ஆற்றல்கொண்டது. விவசாயிகளின் நண்பன். இதன் ஓசையின்றி பறக்கும் ஆற்றல், ஓர் ஆச்சரியம். தலையை இரண்டுபக்கமும் 270 டிகிரி திருப்பும் வல்லமைக்கொண்ட ஓரே பறவை. உலகளவில் அமைதியான இரவில் அதன் ஆளுமையையும், ஓசையையும் கெட்ட சகுனமாக எடுத்துக்கொண்ட மானுடம், கதைகளில் அச்சமூட்டும் கதாப்பாத்திரமாக உருவகப்படுத்தியது. இதனால் பகலில் இவ்வினம் கையில் சிக்கினால் சிறுவர்களால் அடித்து கொல்லப்படுகிறது. மனிதனுக்கு நன்மை செய்தும் கெட்டபெயர்.

மிகவும் போற்றுதலுக்குரிய தாய்மைப் பண்பைக்கொண்ட பறவை (Von der Decken’s Hornbill). இப்பறவையினம் அடைகாத்து குஞ்சுப் பொரிப்பதில் அபூர்வ பண்புகொண்டது. அதாவது பெண் பறவை ஏதேனும் ஒரு பொந்தில் மூன்று முட்டைகள் வரை இடும். பின் ஆண்பறவை அந்த பொந்தின் வாயிலில், காற்று மற்றும் உணவுக்காக சிறிய ஓட்டையை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றை களிமண்ணால் மூடிவிடும். பெண் பறவை உள்ளேயே தங்கிக்கொள்ளும். தினமும் ஆண் பறவை இரை தேடி எடுத்து வந்து பொந்தில் தங்கியிருக்கும் தன் மனைவிக்கு ஓட்டை வழியாக உணவளிக்கும். குஞ்சு பொரித்தவுடன் தாய் பறவையும் குஞ்சுகளும் அந்த களிமண் மூடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும். அதன் பின் அவற்றோடு ஆண் பறவையும் இணைந்துக்கொள்ளும். அதன் அழகான அலகுக்காக வேட்டையாடப்பட்டு அவ்வினம் குறைந்துவிட்டது.


 பறவையினத்தின் மிக வலிமையானது, கழுகு இனம்தான். தன்னைவிட நான்கு மடங்கு அதிகமான எடையை தூக்கி செல்லும் ஆற்றலுடையது. அதேபோல் ஆடம்பரமான வாழ்க்கையும் இவை அனுபவிக்கும். மனிதர்களில் சிலர் பல வீடுகள் வைத்திருப்பதுபோல் கோல்டன் கழுகு என்னும் பறவை வெவ்வேறு இடங்களில் கூடுகள் கட்டி பருவத்துக்கு பருவம் கூட்டை மாற்றிக் கொள்ளும். பங்களாக்களில் வசிக்கும் மனிதர்களைப்போல் Bald Eagle எனும் பருந்து இனம் பிருமாண்ட கூடுகளை மிக உயரமான இடங்களில் கட்டி வாழும். இவற்றின் கூடு ஒன்றின் நீளம் 2 மீட்டர். ஆழம் சுமார் மீட்டர் 3 வரை இருக்குமாம். இவ்வினங்கள் இப்போது அருகி வருகின்றன.

கவிஞர்கள் வெகுவாகக் கொண்டாடும் பறவை, குயில். ஆனால் பண்பால் அது தாழ்ந்ததே. குயில்கள் சொந்தமாக கூடுக்கட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிப்பவையல்ல. இந்தியாவில் வசிக்கும் குயில்கள் காக்கை கூடுகளிலும், இலங்கை, பர்மாவில் வசிக்கும் குயில்கள் நாரையின் கூடுகளிலும் திருட்டுத்தனமாகச் சென்று முட்டையிட்டுவிடும். அவ்வாறு முட்டையிடுவதற்கு முன், அடுத்த பறவை கட்டியிருக்கும் கூட்டைக் கண்டறிந்து அப்பறவை இரை தேட சென்றதும் அதில் ஏற்கனவே இருக்கும் கூட்டின் சொந்தப்பறவையால் இடப்பட்டிருக்கும் முட்டைகளை கீழே தள்ளி உடைத்துவிடும். பின்னர் உடைத்த முட்டையின் நிறத்தைப்போலவே நிறம் மாற்றி தனது முட்டைகளை அடுத்த அடுத்த நாட்களில் இடும். தனது முட்டை என கருதி காக்கை அடைக்காக்கும். காக்கை முட்டை குஞ்சு பொறிப்பதற்கு 3 நாட்கள் முன்பகவே குயில் முட்டைகள் பொறித்துவிடும். காக்கைக்குஞ்சுகளைப்போல குயில் குஞ்சுகளும் குரல் எழுப்பும். காக்கை இரை தேடச் சென்ற நேரங்களில் குயில் அங்கே வந்து தன் குஞ்சுகளைத்தவிர மற்றவற்றை கீழே தள்ளிக் கொன்றுவிடும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு காக்கை இல்லாதநேரம் பார்த்து வரும் குயில், தன் குஞ்சுகளை அழைத்துச் சென்று விடும். இதுவும் குயில் இனத்தின் மரபு சார்ந்த பண்பாகத் தொடர்கிறது. சில மனிதர்களிடமும் இத்தகைய பண்பை காண இயலும். தான் வாழ பிறரைக் கெடுப்பார் உண்டே!

இப்படி எண்ணற்ற பறவையினங்களைப் பற்றி அதன் வியப்பான குணாதிசியங்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். பலருக்கும் நன்கு தெரிந்த கலை வடிவ கூடுகளைக் கட்டும் தூக்கணாங்குருவிப் பறவை போன்று நினைவுபடுத்த வேண்டிய பறவைகள் ஏராளம் உண்டு. எதிர்காலத்தில் இவையெல்லாம் வரும் சந்ததியினரால் நிஜத்தில் பார்க்க இயலுமா? தெரியவில்லை.

உலகில் மனிதனுக்கு மேலாக உயிரினங்கள் வாழ்வதற்காக, கடும் போராட்டங்களைச் சந்திக்கிறது. அதைவிட தன் சந்ததியினரை உருவாக்கிட அவை கடந்து வரும் அபாயங்கள் ஏராளம். மனிதன் தன்னையறிதலே ஞானம். தான் யார் என்கிற உண்மையை உணருதலே ஞானம். பிற உயிரினங்கள் அப்படியல்ல. தன் வாழ்வைத்தாண்டி தன் மரபில் மற்றொரு உயிரை அவை பத்திரமாக உருவாக்குதலே பெரும் பணியாக நிகழ்கிறது. அப்பணியை அவை சிறப்புறச் செய்துவிட்டாலே, அந்நிறைவோடே மரணித்துவிடும் பூச்சியினங்கள், மீன் இனங்கள் உண்டு.

பறவைகளைப் போல் சாலமன் மீன் என்றொரு மீன் இனம் தன் இனப்பெருக்கத்திற்க்காக இடம் பெயர்கிறது. கடலில் வாழும் சாலமன் மீன்கள் தன் இனப்பெருக்கத்திற்காக நதியை நோக்கி பயணிக்கின்றன. இந்த பயணம் கடலில் இருந்து நதியை அடைய ஆயிரம் மைல்களை தாண்டி கூட நடைப்பெறுகிறது. இறுதியில் தனது தாய் எங்கே முட்டையிட்டதோ அதே இடத்திற்கு துல்லியமாக வந்து சேருகின்றன. பின்னர் பெண் மீன்கள் தங்கள் வாலினால் நீருக்கடியில் பள்ளம் தோண்டி அங்கே சிறிய கூட்டை உருவாக்கி அதில் ஆயிரக்கணக்கில் முட்டையிடுகின்றன. அதன் பின்னர் அங்கே வரும் ஆண் மீன்கள் விந்தை அந்த முட்டைகள் மீது பீய்ச்சியடித்து, குழியை மூடி விடுகின்றன. நீண்ட காலம் கடல் நீரில் வாழ்ந்து பழகிய அவற்றால் ஆற்று நீரில் வாழ முடியாமல், அதோடு தனது நீண்ட பயணத்தால் களைத்துவிட்ட அவை திரும்பவும் கடலுக்கு செல்லும் மனமில்லாமல் முட்டையிட்ட நிலையோடு ஆற்றங்கரைகளில் இறந்துபோகின்றன. தனது பெற்றோறைப் பார்க்காமலே பிறக்கும் சாலமன் குஞ்சுகள் மீண்டும் சூழற்சியைத் தொடங்குகின்றன. ஆற்று நீரில் வாழ்வதற்குத் தகுந்த உடலமைப்போடு பிறந்த அவை கடலை நோக்கி பயணிக்கின்றன. சிறிதுகாலம் முகத்துவாரத்தில் வசிக்கின்றன. உப்பு நீர் பழகியதும் கடலுக்குச் சென்று இரண்டிலிருந்து ஐந்து வருடங்கள் வரை வாழ்கின்றன. இறுதியில் இனப்பெருக்கத்திற்காக பிறப்பிடம் நோக்கி நீண்ட பயணத்தைத் தொடங்குகின்றன.

இதேபோல் ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈல் எனும் இந்த விலாங்கு மீன்னிடமும் விஞ்ஞானம் விளங்கிக்கொள்ள முடியாத பண்பு ஒன்று மரபு வழியாக தொடர்கிறது. ஆறு, ஏரி, குளம் போன்ற நன்நீர் நிலைகளில் வாழக்கூடியது விலாங்கு மீன். சில வருட நன்நீர் வாழ்க்கைக்குப்பிறகு தனது இனப்பெருக்க காலங்களில் கடலை நோக்கி பயணத்தைத் தொடங்குகின்றன. இரவில் மழைக்காலங்களில் கூட்டங்கூட்டமாக கரை கடந்து ஆறுகளை நோக்கி ஊர்ந்து செல்கின்றன. பின்னர் கடலை நோக்கி பயணம். வழியில் பல எதிரிகளிடம் சிக்கிக்கொள்ளும். மிஞ்சுபவை கடலை நோக்கி…

ஐரோப்பாவின் ஆறுகளில் இருந்து சார்கோஸ்ஸா கடலை அடைய சுமார் 4800 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க துணிகின்றன. இதனால் பயணம் ஒரு ஆண்டு தொடருகிறது. இறுதியில் அங்கே கூட்டமாக சங்கமிக்கும் விலாங்கு மீன்கள் முட்டையிடத் தொடங்குகின்றன. முட்டையிட்டு முடிந்ததும் சார்கோஸ்ஸா கடலிலேயே, அவை உயிர் விடுகின்றன.

பின்னர் முட்டையிலிருந்து வெளிவரும் விலாங்கு மீன் குஞ்சுகள் மீண்டும் தங்கள் பெற்றோர் வளர்ந்த இடத்தை நோக்கி பயணத்தைத் தொடங்குகின்றன. வந்துசேர மூன்று வருடங்கள் வரை ஆகிறது. சில வருடங்கள் நன்நீர் வாழ்க்கை. இறுதியில் சார்கோஸ்ஸா கடலை நோக்கித் திரும்பத் தொடங்குகிறது. முட்டையிட்டு விட்டு இறந்துவிடுகின்றன.

”உயிரினங்கள் உறவுகொள்ளுதல், கூடுகட்டுதல் போன்றவற்றை கலைத்தல், கெடுத்தல் வேண்டாம். பெரும் பாவம்” என மூதோர் வாக்கு இன்றும் நீடிக்கிறது. காரணம் இப்பிரபஞ்சத்தில் இனப்பெருக்கம் என்பது அவற்றின் பெரும் பணியாக, சில உயிரினங்களுக்கு அதுவே இறுதிப்பணியாகும் அமைந்துவிடுகிறது. அதைக் கெடுப்பவர் பெரும் பாவத்திற்கு உள்ளாவர் என்பதால் நம் வீடுகளில் குழவி கூடுகட்டினால் கூட அதை உடைக்காதே என கூறுவர். அப்படி கட்டுவது அதிஷ்டம் என சொல்லி வைத்தனர். சிறு குருவிகள், அணில் போன்றவை வீட்டு கொல்லை மரங்களில் கூடு கட்டும். அதைக் கலைக்காதே என்பர். பிரபஞ்சத்தில் மனித உயிர்கள் மட்டும் தோன்றிக்கொண்டே இருப்பது அல்ல. மனிதனுக்கு மேலாக உயிரினங்களின் இனப்பெருக்கம் தொடர வேண்டும். வீட்டில் பிராணிகள், பறவைகள் வளர்ப்போர்கூட அதன் பாலியல் உணர்வுக்கு வழி அமைத்து தர வேண்டும். தடுக்கக்கூடாது. அதற்கு சுதந்திரம் அளிப்போரே வளர்ப்பது நல்லது. அதன் உணர்வுகளைத் தடுப்போர் அப்பிராணிகளின் சாபம் பெற வாய்ப்பேற்படுத்தும். அது குலத்தைப் பாதிக்கும்.

About yaanan(யாணன்)

சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும். நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.

3 responses »

  1. பறவைகளை ப்ற்றியும் மீன்களை பற்றியும் அதை மனித வாழ்வியலோடு ஒப்பிட்டு ….. மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.

  2. மனிதனுக்கு முன் தோன்றி அவனுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து தங்களின் வாழ்வை முடித்துக் கொள்ளும் பறவை, மீன் இனங்களைப் பற்றிய உங்களின் பதிவு சூப்பர்.. சூப்பர்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s