Daily Archives: 20/08/2012

எங்கே குளத்து மீன்கள்?

Standard
ன் சிறுவயதுக் காலங்களில் காவிரிப் பாசன மாவட்டங்களில் வளர்ந்தேன். நெடுங்குடி கிராமத்தில் என் சின்னஞ்சிறு வயதுப் பருவம் கழிந்தன. ஆடி மாதம் முடிந்ததும், குளம், குட்டை, வயல்வெளி எங்கும் காவிரி ஆற்று நீர் பாய்ந்து பரவிக்கிடக்கும். வேளாண் பணிகளைத் தொடங்கியிருப்பார்கள். ஐப்பசி, புரட்டாசியில் மழைக்காலம் தன் ராஜ்ஜியத்தை தொடங்கிவிடும். தென்னை ஓலையில் முடைந்த பெரிய முறம் போல ஒன்றைத் தலையில் கவிழ்த்தபடி வேளாண் தொழிலாளர்கள் சிலர் தெருக்களில் பயணிப்பார்கள். சங்க இயக்கியப் பாடலில் வருவது போல் கொடியில் பூக்கும் மஞ்சள் நிற பீர்க்கன் பூக்களை வைத்து, மாலை வந்துவிட்டதை உணர்ந்து, சாமி மாடத்தில் விளக்கு ஏற்றுவார் என் தாயார். மழைக்காலங்களில் பறவைகள் முடங்கிக்கிடக்கும். பச்சைக்கிளிகள் மரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்வதைப் பார்த்திருக்கிறேன். அப்போது விதவிதமான பறவைகள் இருந்தன. குறிப்பாக நீர்நிலைகளை மட்டுமே நம்பி வாழ்ந்த மீன் கொத்திப்பறவைகள். அவற்றின் இறகுகளில் தான் எத்தனை எத்தனை வண்ணங்கள்! எனக்கு அந்தப் பறவை மீதும் காதல் உண்டு.  நிமிடத்திற்கு ஒரு தரம் விசுக்கு விசுக்கு என நீரில் குதித்து வாயில் மீனோடு சிட்டாய்ப் பறக்கும் காட்சிகள். ஆஹா!
 .
கடும் மழையால் விவசாய வேலைக்குச் செல்லமுடியாத நாட்களிலும் தொழிலாளர்கள், ஏதேனும் ஒரு வாய்க்கால் மதகில் உட்கார்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள். ஒவ்வொரு மதகிலும், குளக்கரையிலும் தூண்டிலோடு எப்போதும் சிலராவது அமர்ந்திருப்பர்கள். ஐம்பது பைசா இருந்தால் தூண்டி முள்ளும், நைலான் நரம்பும் வாங்கி தூண்டில் செய்துவிடலாம். ஈர மண்ணைத்தோண்டினால் ஒரு கொத்து நாக்குப்பூச்சிகள்(மண்புழு) எடுக்கலாம். அவற்றை ஒவ்வொன்றாக முள்ளில் கோர்த்துத் தூண்டில் போட வேண்டியதுதான்.
 .
பிடித்த நாட்டுமீன்களைக் கோரைப்புல்லில் சரமாகக் கோர்த்து பிடித்தபடி கம்பீர நடை நடப்பர். சிறுவயதில் சன்னலில் அமர்ந்து,  இப்படிச் செல்வோரைப் பார்த்த நினைவுகள் இப்போதும் மகிழ்வைத் தருகின்றன. மீன் பிடித்தலில் ஏராளமான வழிமுறைகளைக் கையாளுவார்கள். குளங்களுக்குத் தண்ணீர் வரும் வாய்க்கால் முகத்துவாரங்களில் பெரிய வலையில் சாணத்தில் தவிட்டைக் கலந்து வைத்துச் சென்ன, அயிரமீன் குஞ்சுகளைப் பிடிப்பார்கள். குழம்பு வைத்து அப்படியே சாப்பிட வேண்டியதுதான். கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளில் நாட்டுமீன், இயற்கையிலேயே உற்பத்தியானது. வளர்ப்புக்கெண்டைகள் வராத காலம். உரம் போடாத உணவாக மீன் இருந்தது.
 .
காவிரிப் பாசனக் கிராமங்களில்  மீன்கள் பஞ்சமில்லாமல் கிடைத்து வந்தன. வயலில் நாற்று நடும் பெண்களின் கைகளில் தானாக வந்து சிக்கும் மீன்களே அன்றைய குழம்பாகும். குளங்களில் குளிக்கப்போகும் பெண்கள், தங்கள் புடவையால் மீன் பிடித்துத் குழம்பு வைப்பது சாதாரணம். என் அம்மா கூட அப்படிச் செய்திருக்கிறார். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஓடும் வாய்க்காலில் எந்த இடத்தில் காலால் எத்தினாலும் கரையில் இரண்டு மீன் குஞ்சுகளாவது துள்ளி விழும். அதனால் அப்போது கிராமங்களில், கடல் மீன்கள் இரண்டாம் தரமாகப் பார்க்கப்பட்டன. அவற்றை ஐஸ் மீன், செத்த மீன் என ஒதுக்கி வைப்பார்கள். கடல் மீனில் கருவாடு மட்டுமே மரியாதை பெற்றிருந்தது.
 .
எத்தனை விதமான நாட்டு மீன்கள்! கெண்டை, விறால், கெளுத்தி, உளுவை, சென்ன, விலாங்கு, குறவை, அயிரை, ஜிலேபி என எத்தனை எத்தனை! நினைக்கவே நாக்கு ஊறுகிறது. எல்லாம் மீன் தான். ஒவ்வொன்றும் ஒரு ருசி.
 .
வேளாண்மையில் நவீனம் புகுந்தது. நல்லவை விலகின. ரசாயன உரங்களால் மனிதனோடு சேர்ந்து பலவும் மலடாகி வருகின்றன. வயலில் பூச்சிக்கு வைத்த விஷத்தால் விவசாயத்துக்கு பெரிதும் உதவியாக இருந்த மண்புழுக்களும், மகரந்த சேர்க்கைக்கு உதவியாகவும், இயற்கைப் பூச்சி அழிப்பானாகவும் இருந்த சிறு பறவை இனங்களும் செத்து விழுந்தன. வயல் தண்ணீரில் கலந்த விஷம், காலங்காலமாகக் கிடைத்துவந்த  நல் உணவான நாட்டு ரக மீன் இனங்களையும் காவு வாங்கியது. பெரிய வயல் நண்டுகள், நத்தைகள் குறைந்தன. மீன் கொத்திப்பறவைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அரிதாய்ப் பறக்கின்றன. அவற்றின் வாழ்வாதாரமான குளங்களில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இருந்தாலும், அது ஊர் சாக்கடைகளின் கலப்பே! அதில் தாராளமாக மீன்கள் பெருகுவது இல்லை. வளர்ப்புக்கெண்டைகள் வாழும் குளங்களில்  பறவைகளுக்கு அனுமதியில்லை. மீறினால் வலைகளில் சிக்க நேரிடலாம். குளக்கரைகளில் கூடுகட்ட மரங்கள் இல்லை. மொத்தத்தில் பறவைகள் பரிதாபகரமான வாழ்வை எதிர்நோக்கியுள்ளன. அதைவிடப் பரிதாபமாய்க் குளங்கள்! இந்தாண்டு ஆடி பதினெட்டு காவிரி ஆற்றுப்பகுதியில் பம்பு செட்டு தண்ணீரில் குளியல்! எத்தனை வேகமான மாற்றங்கள்!
 .
சரி, இத்தகைய உயிரின அழிவிற்கு ரசாயன உரம் மட்டும்தான் காரணமா? இல்லை, அதோடு பாசன நீரில் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீரும் முக்கிய காரணம். கடல்நீர்-ஆற்றுநீர் கலக்கும் கழிமுகப் பகுதிதான் பலவகை மீன்களுக்குத் ‘தேனிலவு’ பகுதி. இங்கு இயற்கையிலேயே நீருக்கு அடியில் ஏராளமாகச் செடி கொடிகள் வளர்ந்து இருக்கும். இவற்றில் சிறிய வகை மீன்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தன. தொழிற்சாலைக் கழிவுகள் இத்தகைய கடலோரக் கழிமுகங்களில் உள்ள செடிகளை மெல்ல சாகடித்தன. ‘உள்ளதை விற்று உல்லம் வாங்கு’ என்பது, ஒருவகை மீன் இனம் பற்றிய பழமொழி. அப்படி ஒரு ருசியாக இருக்குமாம் உல்லம் மீன். இந்த மீனின் இனப்பெருக்கம் கழிமுகப்பகுதிகளில் தான் நடந்துவந்துள்ளது. இப்போது இந்த மீன் இனம் உலகில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாம்.
 .
இப்போது, கடல் தான் என்ன வாழ்கிறது? உலகின் பெரிய குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. கடல்மீன் வளத்தை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் மீனவர்கள் உலகில் பல கோடி. மீன் வளம் குறைந்தால் இவர்களின் எதிர்காலம்?
 .
இன்று கிராமங்களில் இயற்கையாக உற்பத்தியான மீன்கள் மிகவும் குறைந்துவிட்டன. அங்கு பிராய்லர் கோழிகள் நுழைந்துவிட்டதைப்போல கடல்மீனை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அல்லது வளர்ப்புப் கெண்டைதான் கிடைக்கிறது. ”விறால் எல்லாம் மெட்ராஸ் விலை விக்கிது எங்க வாங்குறது” என்கிறார்கள். சில பகுதிகளில் வளர்ப்பு நன்னீர்க்கொடுவா அதிகவிலைக்குக் கிடைக்கிறதாம். இயற்கையிலேயே வழிவழியாகக் குளம் குட்டைகளில் உற்பத்தியாகி வந்த கெண்டையில் இருந்த ருசி, இந்த வளர்ப்புக் கெண்டையில் இல்லை என்பதற்கு என் நாக்கே சாட்சி.
 .
மிஞ்சி இருக்கும் நாட்டு ரக மீன் இனங்களையாவது காப்பாற்றும் வகையில் மாசுபடாத குட்டைகளை அமைக்கத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முன்வர வேண்டும். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற நல்லவர்கள் வேளாண்மை, நாட்டு ரக மாட்டு இனங்களைப் பாதுகாப்பது போல், நாட்டு ரக மீன் இனங்களையும் பாதுகாக்கும் விழிப்புணர்வுப் பணியைத் தொடங்க வேண்டும்.  நாட்டுகோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கிராமங்களில் பண்ணை வைக்க அரசு மாணிய உதவி செய்வதாக அண்மையில் அறிவித்துள்ளது. அதுபோல் நாட்டு ரக மீன் இனங்களுக்காகவும் திட்டங்கள் தீட்ட வேண்டும்.