த.சரவணத்தமிழன்! – ஒழுக்க வாழ்க்கையின் ஓர் அடையாளம்.

Standard
 
னித்தமிழ் நாவலர், தமிழறிஞர் த.சரவணத்தமிழன். இவரைத் தமிழாசிரியர்கள், தமிழ்பற்றாளர்கள் பலர் அறிந்திருப்பார்கள்.  யாரிடமும் தூயத் தமிழில் தான் உரையாடுவார். காலத்திற்கு ஏற்ற தமிழ் இலக்கண நூல்களான தமிழ்நூல், யாப்பு நூல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  நூல்களை எழுதியவர். திரு.வி.க பற்றாளர். சுயசிந்தனையாளர். திருவாரூரில் திரு.வி.க.வுக்கு சிலை வைக்க காரணமாக இருந்தவர். படைப்பாளிகள் பலரை உருவாக்கியவர். பலருக்கு உதவியாய் வாழ்ந்தவர். தமிழாசிரியராக, தலைமையாசிரியராக பணி செய்து ஓய்வு பெற்றவர். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் தொகுப்பாசிரியராக சில காலமும், தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சித்துறை குழுவில் இலக்கணப்பிரிவில் சில காலமும் பொறுப்பு வகித்திருக்கிறார். சொந்த ஊர் தஞ்சை மாவட்ட பாபநாசம் வட்டம், காந்தாவனம் கிராமம். வேளாண் செட்டியார் மரபைச் சேர்ந்தவர்.
 .
தன் இறுதிகாலங்களைப் பக்கவாதம் பாதித்த நிலையில் துன்பத்தோடு நாட்களை நகர்த்தி வந்தார். அவரின் உடலாக உயிராக வாழ்ந்த அவர் மனைவி சுசிலா தமிழச்சியின் மறைவிற்குபிறகு தன் உயிரை வேண்டாவிருந்தாளியாகவே கருதினார். தான் பிறருக்கு ஒரு சுமை என கருதினார். தற்கொலை செய்துகொள்ளலாமா? என அவர் யோசித்த காலங்கள் உண்டு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மூத்த மகள் தொலைபேசியில் அழைத்து விபரம் சொன்னார். அவர் வீட்டிற்கு சென்று அன்பு மிகுதியாலும், சற்றே கோபத்தோடும் இப்படி பேசினேன்…, உங்கள் ஓய்வூதியம் உங்கள் மகள், மகனுக்கு உதவியாய் இருக்கிறது. அதைக் கெடுக்க இப்படி யோசிக்கிறீர்களா? என கடிந்து பேசியிருக்கிறேன். இப்படியாக கடிந்து பேசும் உரிமையை அவர் என்னிடத்திலேயே அன்பின் காரணமாக தொடக்கம் முதலே அனுமதித்தவர். சென்னை வந்தபிறகு ஆண்டுதோறும் தீபாவளி முதல் நாள் இரவு, இனிப்புகளோடு அவர் வீட்டிற்கு செல்வது என் வழக்கம். இடையிலும் செல்வதுண்டு. அவரும் ஒரு வாய்ப்பில் என் சென்னை வசிப்பிடத்துக்கு வந்திருக்கிறார். அவ்வாறு சந்திக்கிற வாய்ப்புகள் தோறும், விடைபெறுகிறபோது அவர் பாதம் தொட்டு வணங்கியே விடைபெறும் பழக்கத்தை பின்னாளில் ஏற்படுத்திக்கொண்டேன். அவரது மனப்பூர்வமான ஆசீர்வாதங்களைப் பெற்ற நிறைவு என்னுள் நிரம்பி வழிகிறது.
 .
சுமார் இருபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நாகையிலிருந்து திருவாரூர், ஐ.பி. கோயில் தெருவுக்கு முதன்முதலில் குடிவந்தபோது திருவாரூரில் இலக்கியவாதிகள் யாரையும் எனக்குத்தெரியாது. அருகே வசித்த ஒருவரிடம் நான் எழுதிய முதல் சிறுகதையைப் படிக்கச்சொல்லி கொடுத்தபோது, அவர்தான் அடுத்தத்தெருவில சரவணத்தமிழன்னு ஒருத்தர் இருக்காரு. அவரு படிச்சுட்டு திருத்தம் சொல்லுவாரு என அனுப்பி வைத்தார். அப்படியே கிளம்பி அவர் வீட்டுக்கு போனவன்தான்.. அவரது பாரபட்சமற்ற அணுகுமுறை, அக்கறையான பயிற்றுவித்தல், அன்பான உபசரிப்பு என  நாளும் அவரை சந்திக்க வைத்தது. சிறுசிறு சிந்தனைகளையெல்லாம் அவரிடம் சொல்லி, விவாதமாக்கி என்னை கூர்தீட்டிக்கொண்டிருக்கிறேன். தமிழ்நம்பி, இளையநம்பி போன்ற பெரும் புலவர்கள் பணிவுகாட்டி அவரிடத்திலே பேசும் சூழலில், சிறியவன் அதிகாரமாக பேசுவேன். அவர்கள் திகைப்பார்கள். அதைக் கவனிக்கும் த.ச.ஐயா, புதிதாய் வண்டியில் பூட்டப்பட்ட இளங்கன்று யாணன். வேகமாகத்தான் துள்ளும்! என மெல்லியப் புன்னகையோடு என்னைப்பார்த்துச் சொல்லுவார். எனது இயற்பெயரைச் சுருக்கி யாணன் என பெயர் சூட்டியது அவர்தான்.
 .
நாலுவரி எழுதவோ, நாலுவார்த்தை நன்கு பேசவோ தெரிந்துவிட்டால் அவன் இந்த சமூகத்தை மாற்ற பிறந்த படைப்பாளி என்பதுபோல் மற்றவர்களைவிட அவனை உயரத்தூக்கிப்பிடிப்பார். மற்றவர்களிடமும் அப்படியே பறைச்சாற்றுவார். திருவாரூரில் படைப்பாளிகள் அதிகரித்ததற்கு அவர் ஒரு சாணைக்கல்லைப் போல் இருந்தார். யாரும் தங்களை அவரோடு உராய்ந்து கூர்தீட்டிக்கொள்ள முடிந்தது.
.
அவரது அன்றாட உதவியாளனைப்போல் நான்காண்டுகள் மிக நெருக்கமாக பழகியிருக்கிறேன். அவரது குடும்பம் அன்புமயமானது. அவருக்கு கிடைத்த மனைவி சுசிலா தமிழச்சி அபூர்வமானவர். கணவனே கண்கண்ட தெய்வம் எனும் வாக்கியமாய் வாழ்ந்தார். எதிர்த்து பேசத்தெரியாதவர். ஐயா அசைவப் பிரியர். வீட்டுக்கு வந்தவர்களிடம் என் மனைவி சுவையாக சமைப்பாள், இருந்து உணவருந்திவிட்டு செல்லுங்கள் என்பார். அப்படி சாப்பிட்ட நாட்கள் ஏராளம். அவரைவிட ஆறு மாதம் மூப்பு அவரது மனைவி. அத்தை மகள்தான். அத்தனை ஒரு அன்யோன்யம் அவர்களிடம் இருந்தது.
 .
ஐயாவின் தலை வழுக்கைதான். மீசை வைக்க மாட்டார். எனினும் அவர் தோற்றபொலிவு கம்பீரமானது. பேச்சு இசையாய் இனிக்கும். ஐம்பது அகவை கடந்த நிலையிலும் அவர் மீது காதல் வயப்பட்டு கடிதம் கொடுத்த பெண்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். திரு.வி.கவை தன் முன்னோடியாக எடுத்துக்கொண்ட அவர் தனி ஒழுக்கத்தில் திரு.வி.கவை போல தீவிரமாக வாழ்ந்தவர். என் மனைவியைத் தவிர மற்றொருப் பெண்ணை தொட்டதில்லை.  என் மனைவி என்மீது கொண்ட காதல் மகத்தானது என்பார். அவர் ஒரு திறந்த புத்தகம். அவரிடம் எதைப் பற்றியும் பேச முடியும். அன்பு தவிர வேறு ஒன்றும் அறியாதது அவர் குடும்பம். மனிதர்கள் விளம்பரத்துக்கும், புகழுக்கும் வித்தியாசம் தெரியாமல் செயல்படுகிறார்கள், என்பார்.
 .
மூத்தமகள் தமிழரசியின் கணவர் ராமையன். சென்னையில் குளிர்சாதன பெட்டி பழுது நீக்குபவராக தொழில் செய்து வாழ்ந்தவர், சரியான நேரத்துக்கு உண்ணாமல் அல்சர் வந்து திருமணமான ஏழு ஆண்டில் இறந்துப்போனார். அந்தத் துக்கச்செய்தியை சென்னையில் இருந்து ஐயாவின் மகன் குறளேந்தி என் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்து, (அப்போது செல்பேசி வராத காலம்) அப்பாவுக்கு உடனே சொல்லி மகிழுந்து பிடித்து அனுப்பி வையுங்கள் என்றார். அந்தச்செய்தியோடு ஐயாவைப் பார்க்கச் செல்கிறேன். எனக்குள் உள்ளுற ஒரு குறுகுறுப்பு. இந்த செய்தியை அவர் எப்படி உள்வாங்குவார், கதறிவிடுவாரோ என பல யோசனைகளோடு செல்கிறேன். எப்போதும் போல் வாங்க என்கிறார். ஐயா குறளேந்தி தொலைப்பேசி பண்ணினாரு. உங்க மாப்பிள்ளை சென்னையில இறந்துட்டாராம்! நேரடியாகச் சொன்னேன். அப்படியா…என்றார் நிதானமாக. அடுப்பங்கரையில் வேலையாய் இருந்து அவர் மருமகள் வாசுகி.(குறளேந்தியின் மனைவி) நான் சொல்வதை கேட்ட மாத்திரத்தில் ஓவென பெருங்குரலோடு அழுதார். அந்தபையன் கடும் பணிசுழல்ல சரியா சாப்பிடாம உடம்ப கவனிக்காம விட்டுட்டான் என்று ஏதோ விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அதிர்ந்துவிட்டேன். பின்னர் மகிழுந்து பிடித்து அவரை சென்னை அனுப்பினேன். போவதற்குள் இடையில் ஏற்பட்ட தடைத் தாமதங்களினால் உடலை அவரால் பார்க்க முடியாமலேயே போனது.
 .
இந்த நிகழ்வை அடுத்து, ஓராண்டுகளில் வேறுவேறு மன அழுத்தங்களால் திருவாரூர் பகுதியில் இருந்து இடம்பெயர முடிவெடுக்கிறார். மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கிறார். திருவள்ளுவர் மாவட்ட குக்கிராமம் ஒன்றில் மாறுதல் கிடைக்கிறது. மாற்றலாகி செல்லும் இடங்களிலும் அவரது இயல்பு மாறாது. அங்குள்ள மக்களிடமும், மாணவர்களிடமும் தனித்தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்துவதை தனது முதற்க்கடமையாக செய்து வருவார். அங்கே தனது மூத்த மகளை உடன் வைத்துக்கொண்டு அஞ்சலில் பட்டபடிப்பு படிக்க வைக்கிறார். மூத்த மகளுக்கு துணையாகவே இறுதி வரை வாழ்ந்தார். அவரும் அப்பா அப்பா என உருகி கவனித்துக்கொண்டார்.
 .
பெரிய இலக்கியப்படைப்பாளிகள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எழுத்தில், படைப்பில் உள்ள குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டும் இயல்பு கொண்டவர். பெரிய சபைகளில் மாற்றுக்கருத்தை தைரியமாக சொல்லுவார். பெரிய மனிதர்களிடம் வளைந்து நெளிந்து போக மாட்டார். முக்கியத்துவம் பெற வேண்டிய பல நிலைகளில் பெரிய மனிதர்களால் தவிர்க்கப்பட்டார். அதற்காக கவலையும் கொள்ளாதவர். அவரது இயல்புக்கு ஒரு சம்பவம்…
 .
அவரது தமிழ் மீது பற்றுக்கொண்ட திருவாரூர் இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஐயாவின் பொருளியல் சிரமம் அறிந்து ஆண்டுதோறும் ஐயாயிரம் ரூபாய் உதவுவதாக என்னிடம் தொலைபேசியில் தெரியப்படுத்தினார். நானும் அவர் பெயருக்கே வரைவோலையாக(டிராஃப்ட்) அனுப்புங்கள் கொடுத்துவிடுகிறேன். என்றேன். வரைவோலையை அஞ்சலில் அனுப்பி வைத்தார். மகிழ்வோடு எடுத்துக்கொண்டு கரிசங்கால் சென்று சந்தித்து விபரம் சொல்லி கொடுத்தேன். தயக்கமாக வாங்கிப்பார்த்தார். அவரை யாரென தெரியாதே என்றார். உங்களுக்கு தெரியும் மறந்துவிட்டீர்கள் என்றேன். உங்க செல்பேசியில் அவரோடு இப்ப பேச முடியுமா? என்றார். தொடர்புகொண்டேன். அந்த நபரிடம்  நீங்க எனக்கு பணம் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்றார். அன்பின் அடையாளம். உங்கள் தமிழ் மீது பற்று என்றார். என்னிடம் பள்ளியிலோ, படைப்பிலக்கிய பட்டறையிலோ பயிலாத நீங்கள் எனக்கு உதவ முன்வந்ததை என் மனம் ஏற்கவில்லை. பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறேன். என்றார். அவரோ ஐயா திருப்பி அனுப்பி விடாதீர்கள். கடனாக வைத்துக்கொள்கிறேன். தங்களை நேரில் சந்திக்கும் போது பெற்றுக்கொள்கிறேன். என்ற அந்த நபர். என்னிடம் கூறினார் ‘த. ச. ஐயா வடிவில்  திரு.வி.க.வைக் காண்கிறேன். என்று…
 .
பலருக்கு விழா எடுத்து பாராட்டிய அவருக்கு நண்பர்கள் இணைந்து ஒரு விழா எடுத்தோம். விழாக்குழுத் தலைவராக தென்றல் சந்திரசேகர் இருந்தார். இயற்றமிழ் பயிற்றக புலவர்கள், ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பு செய்தனர். செந்தூர்பாரி போன்ற பொது மனிதர்களும் சென்னையில் இருந்து விழாவுக்கு வலு சேர்த்தனர். கணவன் மனைவி இணையராக வீதி ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டு, மேடையேற்றினோம். அடியேனும், மதிமுகவைச் சேர்ந்த திருவாரூர் சீனிவாசனும் இணைந்து ஒரு நாடகம் நடித்தோம். அதில் சரவணத்தமிழனாக அவர் நடித்தார். நான் அவரைச் சந்திக்க வரும் ஒரு படைப்பாளியாக நடித்தேன். அந்த நாடகம் குறித்து பலமுறை என்னிடம் மகிழ்ந்து பேசியிருக்கிறார். அண்மையில் மறைந்துபோன அற்புத படைப்பாளி அடியாற்குநல்லான் அவ்விழாவில் பரவசம் தரும் சிறிய உரை தந்தார். பெருமைமிகு அவ்விழா முடிந்த ஆறு மாதங்களில் மாரடைப்பால் ஐயாவின் மனைவியார் சுசிலா தமிழச்சி மறைந்தார்.  இத்தம்பதியினருக்கு இல்லற வாழ்வில் மொத்தம் பிறந்தது எட்டு குழந்தைகள். நான்கு குழந்தைகளே பிழைத்தனர்.
 .
மூத்த மகன் பெயர் குறளேந்தி. இவருக்கு ஐந்து மகள்கள். தற்போது காந்தாவனம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழறிஞரின் மூன்று மகள்களில் இருவர் விதவையாயினர்.
 ஐயாவின் இரண்டாவது மகள் மெய்யறிவின் கணவர்.. இருச்சக்கர பழுது நீக்குபவராக தொழில் செய்து வந்தவர், தன்னிடம் இருந்த நுரையீரல் பிரச்சினைக்கு சரியாக  சிகிச்சை எடுக்காததால் அவரும் மறைந்தார். இரண்டாவது மாப்பிள்ளை இறந்த போது சற்றே கலங்கினார் ஐயா…
 .
அப்போது அவர் தன் மாப்பிள்ளையின் நினைவில் எழுதிய இரங்கல் கவிதை…
 .
திரு.சவகர் எனும் அமைதி மாப்பிள்ளை (இரங்கல்)
காலம்: 20-5-2003
களம்: புதுக்கோட்டை
கண்ணியமிக்க காந்தாவனத்துக்
கன்னியர் சிலபேர் புதுக்கோட்டை புகுந்தனர்
இரத்தினம், அம்சவல்லி, இந்திராணி
பத்மாவதி மெய்யறிவு பாங்கொடு வாழ்ந்தனர்
எனினும் அந்த ஐவருள் மூவர்
கணவரை இழந்தும் கருத்தாய் இருந்து
குழந்தையைக் காத்தனர். பெரிய பாட்டன்
ஆனந்தராமன் குடும்பப் பெண்கள்
ஞானம், தையல்நாயகி, இருவரும்
பூண்டி புகுந்து கணவர் இறந்தும்
ஆறு வேலி நிலத்தைக் கொண்டு
பேரர் கண்டனர், சின்னப்பாட்டன்
வீராசாமி குடும்பப் பெண்கள்
இருவர் பெற்ற பிள்ளைகளுக்குத்
தமிழரசி, மெய்யறிவு இருவரைக் கொடுத்தோம்,
குடும்பச்சுமையைக் கூடத்தாங்கி
இரவும் பகலும் இருமடங்கு பணியால்
இராமையன் இறந்தார்,இக்கால் சவகர்
நல்ல கல்வியும் நல்ல வேலையும்
இல்லையே என்னும் ஏக்கம் இருப்பினும்
தஞ்சையில் கீழவாசல் வந்தோர்
மீளச் செல்ல மிதிவண்டி மிதித்தது
பல்லாயிரம் முறை இருக்கும், ஏறிச்
சென்றோர்க்கு எல்லாம் நன்றியும் இருக்கும்
சென்னை, புதுகையில் இருசக்கர வண்டி
ஒழுங்கு தொழிலைத் தொடர்ந்து பண்ணியவர்
இல்லப் பணிசெய்தார், இல்லாமல் போனார்.
தங்க மகளின் கலங்கிய மனமும்
குழந்தைகள் இருவரின் வாடிய முகமும்
மலர்ந்து சிரித்திடும் நாள் வர வேண்டும்.
ஏசினும் வாழ்த்தினும் ஏதும் செய்யாத
இயற்கை என்னும் இறைவன் அன்றி
உறவும் நட்பும் உதவ வேண்டும்.
-த.சரவணத்தமிழன்.
இவரைப்போல இன்னொரு தளத்தில் உன்னத மனிதராக உயர்ந்து விளங்கி சின்னக்குத்தூசி ஐயா அவர்கள், த.ச.ஐயா மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். வாழும் காலத்திலேயே ஐயாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் எனும் ஆவல்கொண்டு என்னிடம் ஐயாவின் நூல்கள் ஒரு படியும், அவரிடம் சம்மத கடிதம் ஒன்றும் வாங்கி வரும் படி கூற, நானும் அவ்வாறு செய்தேன். முரசொலியில் ஐயாவைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். மற்றமுயற்சிகள் நிகழாமலேயே போனது. எதிர்காலத்தில் நிகழுமா? தெரியாது. அவரும் மறைந்துபோனார்.
 .
உடல்நலம் குன்றி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்ததும் குறளேந்தி தொடர்புகொண்டு பேசினார்.  உடனே சென்றேன். ஐ.சி.யூ வில் வைக்கப்பட்டிருந்தார். வாய், மூக்கு முழுதும் சிறு குழாய்கள் சிக்கிக்கிடந்தன. நினைவுகள் அவரை விட்டு நகரத்தொடங்கியிருந்தது. அவரது அன்பு தங்கை வள்ளி தேம்பினார். அண்ணன் உள்ளே போகும் போதே, நான் முக்கால் பாகம் இறந்துவிட்டேன். என் இறப்பு செய்தி கேட்டு வரும் உறவினர்கள் நண்பர்களுக்கு இப்போதே என் நன்றியைத் தெரிவிக்கிறேன்னு. சொல்லிட்டாங்க. என சொல்லிச் சொல்லிச் அழுதார்.
 .
26-8-12 இரவு குறளேந்தி பேசினார். இறுதி கட்டம் வந்துவிட்டது என்றார். அவர் ஆன்மா பிரிந்த செய்தி கேட்டபோது துயரம் தொடரவில்லை. துன்பத்தில் இருந்து அவர் ஆன்மா விடுதலை அடைந்ததற்காக நிம்மதிகொண்டேன். அவர் விருப்பம் போல் உடல் கொடை வழங்கப்பட்டது.
 .
திருவாரூரில் இருந்து காந்தி பேசினார். திரு.வி.க. வின் பிறந்தநாளில் ஐயா மறைந்திருக்கிறார். என்ன ஒரு ஒற்றுமைப் பாருங்கள் என்றார்.
ஐயாவின் ஒழுக்க வாழ்க்கைக்கு அது ஒரு அடையாளம். அவரிடமிருந்து அதைத்தான் நான் பயின்றேன். அவரது  தமிழைப் பயிலும் சக்தி எனக்கில்லை.
 .யாணன்
.

About yaanan(யாணன்)

சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும். நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.

One response »

  1. thiruvarur kondada vendiya oru manithar saravanathamilan iya, neengal oruvar than avar valthapothum, maraithapothum marakkamal avarai pathivu seithavar, ungaluku thiruvarur sarbaga en nandri, iya vai vaithu vilambara paduthi kondavargal, endru varai iya vin erapu, ninaivukal sariyaga sollamale vittu vitargal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s