Monthly Archives: December 2012

நன்றியே முதலானது!

Standard
 சந்தித்ததும் சிந்தித்ததும்’ நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை…
yanan 2
முன்னோர்களை வணங்குகிறேன்.
பெற்றோரை வணங்குகிறேன்.
குருநாதர்களை வணங்குகிறேன்.
இந்நூலின் வாசகர்களாகிய உங்களை வணங்குகிறேன்.
 .
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஜவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை எனும் குறுந்தொடரை தமிழ் ஓசை களஞ்சியத்தில் எழுதினேன். பின்னர் இணையத்தில் பதிப்பித்தேன். அதை வாசித்த
வாசகர்களில் ஒருவர் பழமைப்பேசி. அமெரிக்காவில் பணி செய்து வருகிறார்.
 .
மின்னஞ்சல் வழியே தொடர்பு கொண்டு அலைப்பேசி எண்ணை வாங்கிப் பேசினார். பின்னர் அவரது வலைப்பூவில் பின்வருமாறு ஓரிரு வரிகள் எழுதினார்:
 .
‘சமீபத்தில் நான் வாசித்துச் சிலிர்த்த எழுத்து என்றால், அது எழுத்தாளர் யாணன் அவர்களுடைய எழுத்துதான். அவர் எழுதிய சவ்வாது மலைத் தொடரை வாசிக்க வாசிக்க, எனது வாழ்க்கையின் பொற்காலம் என்று நான் கருதுகிற மலையும் மலைசார்ந்த என் பால்ய காலமும் நினைவில் மோலோங்கின.
 .
அத்தொடரானது இருநாட்கள் எம்மை வெகுவாகப் பாதித்து, அந்த இரு நாட்களும் இடுகைகள் கூட இடவில்லை. மீண்டும் மீண்டும் என்னவெல்லாமோ எம்முள் வந்து சென்றது. இயற்கை அன்னையின் ஏகோபித்த அரவணைப்பில், பெற்ற அன்னையின் செழுமிய வளர்ப்பில், உற்றார் உறவினரின் கனிவில் வளர்ந்து திரிந்த நாட்கள் அவை. மலைவாழ் மக்கள் அள்ளி அள்ளித் தெளித்த அன்பில், திளைத்த பொழுதுகள் மீண்டும் வந்து நெஞ்சைக் கப்பிக் கொண்டன.
 .
எம்மை அந்நினைவில் தோய்த்துத் தோய்த்து இனிமை கொண்டவன், அந்த இனிய எழுத்தாளரை அழைத்து எம்நினைவு களைத் தட்டி எழுப்பியமைக்கான பாராட்டுகளைத் தெரிவித்துச் சிலாகிக்கவுமானேன்’ என்று எழுதியதோடு மட்டுமில்லாது, மற்றொரு சமயம் சொந்த ஊரான கோவைக்கு வந்த போது
சென்னையில் எனது வீட்டிற்கு வந்து என் மகன்களோடு சில மணிநேரம் செலவிட்டுச் சென்றார்.
 .
இத்தொடரை வாசித்த எழுத்தாளர் பழமைப்பேசி முதலான எண்ணற்ற வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். என்னை இத்தொடரை எழுதும்படி தூண்டியவர் தமிழ் ஓசை க.குமார். அவருக்கும், மலைப் பயணத்தில் உடன் வந்து ஒத்துழைத்த அவரது கிராம நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
 .
இந்நூலின் சில கட்டுரைகள் தேவதை இதழில் வெளிவந்தவை. அதன் ஆசிரியராக விகேஷ் பொறுப்பேற்றபோது அவ்விதழின் கடைசிப் பக்கத்தை எனக்கு ஒதுக்கி நல்சிந்தனை எனும் தலைப்பில் எழுதத் தூண்டினார். அவருக்கு என் நன்றிகள். மேலும் சில கட்டுரைகளை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தவர், திருவாரூரில் இதயத்தூது எனும் சிற்றிதழை நடத்தி வரும் நண்பர் சுந்தரம். அவருக்கும் என் நன்றிகள்.
 .
 எழுதுவதோடு இருந்த அடியேனை, தனிமேடை தந்து பேச வைத்து, அடுத்த பரிணாமத்துக்குக் கரம்பிடித்து அழைத்துச் சென்று மகிழ்ந்தவர், முனைவர் சி.என்.மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ்.  அவர்கள். அவருக்கு இச்சமயத்தில் நன்றி கூறுகிறேன். அதேபோல் திருவாரூர் அ.மோகன்தாஸ், புலவர் எண்கண் ச.மணி ஆகியோருக்கும் என் நன்றி.
 .
திருவாரூரில் எனது வீட்டை விற்று விட்டுப் புறப்பட்டபோது மகாலிங்கம் எனும் பணியாளரோடு வந்து உதவியாய்ச் சாமான்களைக் கட்டி வண்டியேற்றி அனுப்பி வைத்தவர்  திருவாரூர் மதிமுக சீனிவாசன், மறக்க இயலாதவர். தம்பி பிலால், சகோதரன் குறளேந்தி, அன்புக்குரியவர்கள். துன்பகாலத்தில் விட்டு விலகாத இன்னும் பலர் உண்டு.
 .
மாறாத அன்பைச் செலுத்தும் திருத்துறைப்பூண்டி ஜெயராமன், திருவாரூர் ஜீ.வரதராஜன், சுபாஷ் காந்தி…பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பள்ளிதோழர் துரைமாணிக்கம், போன்றோருக்கும் என் நன்றிகள்.
 .
அலுவலகப் பணியில் என் இரு கரங்களாக விளங்கும் மேலாளர் வேதாரண்யம் ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர் கவுதம், மற்றும் பசுமை முருகேசன் ஆகியோருக்கு என் நன்றிகள்.
 .
அன்பு மனைவி கௌரி, மகன்கள் ஆதிபகவன், கவுதமபுத்தன் ஆகியோர்க்கு ஆசிகள்!
 .
அன்புடன்,
யாணன்