Monthly Archives: September 2016

திருமாவுடன் சந்திப்பு!

Standard

தேர்தல் நெருக்கடியால் சித்திரை முழுநிலவு விழாவின் முக்கியத்துவம் பொதுமக்கள் கவனத்தில் குறைந்துவிடாமல் இருக்க அப்போது ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்தி வர முனைந்தோம். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்திக்க முயற்சித்ததில் வைகோ மற்றும் திருமா அவர்களையே நம்மால் சந்திக்க முடிந்தது. அவ்வாறு திருமா அவர்களைச் சந்தித்தபோது பல்வேறு நிகழ்ச்சி நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் முக்கால் மணி நேரம் உரையாடினோம். விடைபெறும் போது எடுக்கப்பட்ட கானொளியில் இது. இரு தலைவர்களுமே மிகுந்த மதிப்பும், மரியாதையும் செலுத்தியது என்றும் மறக்க முடியாதது. -யாணன்

’’சமண மதத்துச் செட்டிச்சி என இகழ்ந்தார் ஆறுமுக நாவலர் …!’’ கண்ணகி ஆய்வாளர் யாணனுடன் ஒரு சந்திப்பு

Standard

yaanan-interview

தமிழகத்தில் அருகிவிட்ட கண்ணகி அம்மன் வழிபாடு இலங்கையில்தான் அதிகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இவ்வழிபாட்டில் தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிங்களவர்களின் முக்கியமான காவல் தெய்வமாக கண்ணகி (பத்தினி தெய்யோ) விளங்குகிறாள். பில்லி, சூன்யம், செய்வினை போன்றவற்றை பத்தினியின் உதவியுடனேயே செய்வதால் சிங்கள மாந்திரிகர்களின் குலதெய்வமாக கண்ணகி வீற்றிருக்கிறாள். தமிழகத்திலிருந்து கண்ணகி அம்மன் வழிபாடு எப்படி பெரும்பான்மை சமூகத்தில் ஊடுருவியது? கண்ணகி யார்? என்ற கேள்விகளோடு தமிழகத்தில் ஒரு தேடுதலில் இறங்கியபோது எமது கண்ணில் பட்டவர்தான் எழுத்தாளர் யாணன். பிளக் ஹோல்
(Black Hole) பதிப்பகத்தை நடத்தி வரும் இவரின் ஏராளமான படைப்புகள் நூலுருவில் வெளியாகி இருக்கின்றன. அதில் பாவ புண்ணிய கணக்குகள் என்னும் நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூலாகும். அதோடு கண்ணகி அம்மன் பற்றிய ஆராச்சி நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கும் இவர் தமிழகத்தில் அருகிப்போய் விட்ட கண்ணகி அம்மன் வழிபாட்டை மீட்டெடுத்து அதைப் பொதுமக்களிடம் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார். யாணனின் இந்த களப்பணிக்கு அவரின் துணைவியார் கௌரியும் பக்கபலமாக இருக்கிறார். தங்கள் இல்லத்திலேயே கண்ணகி அம்மனுக்கு உருவச்சிலை அமைத்து வழிபாடு செய்து வரும் யாணனை ஒரு இனிய மாலை வேளையில் சந்தித்து கண்ணகி அம்மன் பற்றி உரையாடினோம்.

yaanan

கண்ணகி வழிபாட்டை இலங்கைக்கு கொண்டு வந்தவர் கஜபா என்ற சிங்கள மன்னன் என்று சொல்லப்படுகிறது.. பத்தினி என்ற பெயரில் கண்ணகி வழிபாடு சிங்கள பௌத்தர்களிடம் காணப்படுகிறது. இதுபற்றி ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

இது குறித்து சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தில் குறிப்பிடப்படுகிறது. இன்றைய கேரள மாநிலம் குமுளிக்கு மேலே அமைந்துள்ளது, மங்கலதேவி கோட்டம். இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவனால எழுப்பப்பட்டது. இமயம் சென்று திரும்ப ஐந்தரை ஆண்டுகள் பயணம் மேற்கொண்ட சேரன் செங்குட்டுவன் வடபுலத்து அரசர்களான கனக, விசயன் ஆகியோரை வெற்றி கொண்டு இமயமலையில் கல்லெடுத்து அதைக் கங்கையில் நீராட்டித் சிற்றரசர்களின் தலைச்சுமையாக இங்குக் கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகி சிலை வடித்துள்ளான். அச்சிலையை, குன்றக் குறவர்கள் சாட்சியாக கண்ணகி விண்ணுலகம் சென்ற அம்மலையின் மீது எழுப்பபட்ட ஆலயத்தில் நிறுவி குடமுழுக்கு செய்துள்ளான். அந்நிகழ்வில் பல அரசர்கள் கலந்து கொண்டனர்.

yaanan

இலங்கையில் இருந்து கஜபாகு எனும் மன்னனும் விருந்தினராக கலந்துகொண்டுள்ளான். அன்றைய இரவு விண்ணில் விஸ்வரூப தரிசனம் தந்தாள் கண்ணகி. அதைக் கண்ட சேரன் சிலிர்ப்புற்றான். அருகில் இருந்த கஜபாகு தரிசனத்தைத் தன்னால் காண இயலவில்லையே என ஏங்கி கற்பகிரத்தினுள் சென்று ‘தாயே, அடியேன் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன். நான் உனக்கு இலங்கையிலும் ஆலயம் எழுப்பி வழிபட விரும்புகிறேன். உத்தரவு வேண்டும்’ என கேட்க சிலையில் இருந்து அசரீரியாக சம்மத வாக்கு கிடைத்திருக்கிறது. பெரிதும் மகிழ்வுற்ற மன்னனிடம், சேரன் சந்தனப்பேழையில் வைத்து சிலம்புகள் வழங்கியதாக குறிப்புகள் உள்ளன. இராஜவளி என்ற சிங்கள நூலிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் ‘அங்கணக்கடவை’ எனும் இடமாம். சிங்களநாட்டில் ‘பத்தினி தெய்யோ’ என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும். கண்ணகியை ஒரு குறிப்பிட்ட மொழி இனத்துக்கான தெய்வமாக ஏன் சுருக்க வேண்டும்? சிங்களவர் கண்னகியை வழிபடுவது, வரவேற்கதக்கது. தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கு ஓரு காரணியாக இது அமைந்திருக்கிறது.

arumuga-navalar

இலங்கை வரை வந்த கண்ணகி வழிபாடு இந்தியா முழுமைக்கும் பரவவில்லையே?

அக்கால அடித்தட்டு மக்கள் அபலைகள். சமூக பலம், பொருள் பலம் இல்லாத சாமானியர்கள். அவர்களே கண்ணகியைத் தங்களில் ஒருத்தியாகப் பார்த்தனர். கணவனோடு பிழைப்பு தேடி இடம்பெயர்ந்த இடத்தில் துயரம் நேர்ந்தபோது ஆவேசம் கொண்ட அவளுக்கு இயற்கை கைகட்டி மண்டியிட்டது! அந்தக் காட்சி சாமானிய ஏழைகளின் வாழ்வில் நம்பிக்கைகொள்ள வைத்தது. நமக்குக் கண்ணகி துணை நிற்பாள் என நெஞ்சுரத்தோடு நடந்தனர். கண்ணகியைப் போல் கறைபடாது வாழ்ந்தவர்கள் வாக்கு பலித்தது. தாங்கள் வயிறு எரிந்து வழங்கும் சாபமும் வஞ்சகர்களைக் கேட்கும் என நம்பினர். அப்படியே நடக்கவும் செய்தது. எதிர்த்து பேச முடியாத அநியாயக்காரர்களை எண்ணி மண் வாரி இறைத்தனர். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும் என்பதைக் கையில் உண்மையான வாளோடு திரிந்தவர்கள் உணர்ந்து அடங்கினர். ஏழைகளுக்கு, அபலைகளுக்குக் கண்ணகி துணையானாள். அவளை நினைத்து நெற்றியில் மஞ்சள் பூசினர். தலையில் வேப்பிலை சூடினர். கண்ணகி துயரம் கொண்ட ஆடிமாதம் விரத மாதம் ஆனது. கண்ணகி வழிபாடு தமிழர்களிடம் அசுர வளர்ச்சிபெற்றது.

arumuga-navalar-1

ஆறுமுக நாவலர்
இந்தியாவில் தோன்றிய பௌத்தம், ஆசிய நாடுகளில் பரவியதுபோல, இஸ்ரேலில் தோன்றிய இயேசுவின் போதனைகள், பின்னர் வழிபாடாக உலகளவில் பரவியது போல, கண்ணகியும் உலகம் முழுதும் பரவி நின்றிருக்க வேண்டியவள். கண்ணகி வழிபாடு தனி ஒரு மதமாக கூட உலகம் தழுவியிருந்திருக்கும். அதை உணர்ந்தே தடுத்தனர் அரசர்களைக் கையில் வைத்திருந்தவர்கள். அவள் சமணப் பெண் என்று சமூகத்தில் தாழ்த்தினர். சிறுதெய்வ வழிபாடு என்றனர். பலி கேட்கும் தெய்வம் எனப் பழித்தனர். இதெல்லாம் எதனால்? ஒரு சாதாரண குடும்பப்பெண்ணாக இருந்தவள், ‘தவறு என்றால் அரசனாக இருந்தாலும் தட்டிக்கேள்’ எனும் நெஞ்சுரத்தை சமூகத்திற்கு விதைத்துள்ளாளே! எளியோர் அவளை வழிபடுவதின் வாயிலாக, அவள் வரலாறு திரும்ப திரும்ப நினைவுகூரப்படுவதன் வாயிலாக, அவளை அடியொற்றி ஒரு பாதை விழுந்தால், ஒரு பக்தப்படை எழுந்தால் என்னவாகும்? என்பதே, பின்னர் வந்த அரசர்களுக்கு, எடுத்துச்சொல்லப்பட்ட யோசனையாக, எச்சரிக்கையாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த சைவ நெறிப் பற்றாளர் ஆறுமுகநாவலர் மிகக் கடுமையாகக் கண்ணகி வழிபாட்டை எதிர்த்துள்ளார். கண்ணகி ஒரு தமிழச்சி. முதல் புரட்சிப்பெண். தமிழர்களின் அடையாளம் எனப் பலவாறு புகழ வாய்ப்பிருந்தும், அவளை மிகச் சாதாரணமாக ‘சமண மதத்து செட்டிச்சி’ எனக் குறிப்பிட்டார் ஆறுமுக நாவலர். “அவளை ஏன் வழிபடுகிறீர்கள்?” எனக் கொச்சையாகக் கேட்டு, தன் அசுரச் செல்வாக்கால் ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்துள்ளார். எனினும் இலங்கையில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறாள் கண்ணகி என்பது ஓர் ஆறுதல்.

கோவலன் பொட்டல்,
கோவலன் தலை வெட்டப்பட்ட கல்
சேரன் செங்குட்டுவன் ஆட்சியமைந்த கேரளா தேசத்தில் பரவி நின்ற கண்ணகி வழிபாடு பின்னர் வந்த ஆதிசங்கர் தலையீட்டால் பகவதி என பெயர்மாற்றப்பட்டாள். இன்றும் கொடுங்கநல்லூர் பகவதி, அட்டுகல் பகவதி என பல இடங்களில் பகவதியாக மிக செல்வாக்கோடு திகழ்கிறாள், கண்ணகித் தாய். மலைவாழ் மக்களான வேடுவர்கள், அவளை ‘மங்கல தேவி’ என்ற பெயரில் தெய்வமாக வணங்கியுள்ளனர். குறும்பர் பழங்குடியினர் குறும்பா பகவதி என வழிபடுகின்றனர்.

கண்ணகி கதை கற்பனையாகத்தானே இருக்க வேண்டும்?

கண்ணகி ஓர் உண்மை நிகழ்வு. அவள் ஒரு வரலாறு. அதற்குச் சான்றுகள் பல உண்டு. சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர்களில் ஒருவர், ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

“மதுரையின் கிழக்கு வாயில் வழியே கணவனுடன் நுழைந்த நான், இப்போது அநாதையாக மேற்குத் திசை வழியே செல்கிறேன்” (‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கின்றேன்’) என்று புலம்பிவிட்டுக் கண்ணகி புறப்படுவதையும், கரடுமுரடான பாதையில் மேற்குத்திசை நோக்கி நடந்து நெடுவேள் குன்றம் ஏறி, மலர்ந்த ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நிற்பதையும், பதினான்காம் நாளன்று வானஊர்தியில் இந்திரன் உள்ளிட்ட தேவர்களோடு, கோவலனும் வந்து கண்ணகியைப் பணிந்து உடன் அழைத்துச் செல்வதையும் எடுத்துரைக்கிறது சிலம்பு.

அப்படி கண்ணகி மலைமேல் ஏறி, வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் இந்நூற்றாண்டில் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவர் சி.கோவிந்தராசனார்.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் பழைய மதுரை எது என எழுத்தாளர் ஜெயமோகன் தன் பதிவு ஒன்றில் குறிப்பிடுவது, வைகைக்கு மறுபக்கம் உள்ள மணலூர் என்ற கிராமத்தையே. தென்மதுரையைச் சேர்ந்த பழங்காநத்தம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள கோவலன் பொட்டல் வரலாறு தொடர்புடைய ஊர். சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணைப்படி கோவலனின் தலை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டுத், தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 – கிபி 300 இடைப்பட்ட சங்க காலத்தில் சுடுகாடாக இருந்தவை. கோவலன் உடல் அடக்கம் செய்யப்பட்டதின் காரணமாகவே பிற்காலத்தில் கோவலன் பொட்டல் என அழைக்கப்பட்டுள்ளது.

இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் இங்கு தங்களது ஆராய்ச்சியைத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் அங்கு மூன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். சிலப்பதிகார நிகழ்வுகள் அனைத்தும் உண்மையே என்பதைக் காலம் சிறிது சிறிதாக உணர்த்தவே செய்கிறது. மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவலன் பொட்டல். மதுரை, புகார் மற்றும் கேரளாவில் உள்ள ஆதித்தமிழர்கள், பழங்குடிகள் பலரிடமும் கண்ணகி வரலாறு குறித்த தகவல்கள் ஏராளம் உள்ளன.

கண்ணகி துயரம் கொண்ட ஆடிமாதம் என்கிறீர்கள். அதை விளக்குங்கள்.

தமிழ் ஆய்வாளர்கள், கண்ணகியின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தது எல்லாம் ஆடி மாதத்து வெள்ளிக்கிழமைகளில்தான் என்று கூறுகிறார்கள். (தமிழறிஞர் மு.வரதராசனார்)
அவள் மதுரையை எரித்ததும் ஓர் ஆடி வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று. அதன் பின் கண்ணகி, பதினான்கு நாட்கள் நடந்துவந்து சேர்ந்த இடமே இன்றைய மங்கலதேவிக் கோட்டம். அதனால் பிற்காலத்தில் அம்மன் கோயில்கள், வெள்ளிக்கிழமைகளில் முக்கியத்துவம் பெற்றன. வெவ்வேறு பெயர்களில் எழுப்பப்பட்டுள்ள அம்மன் கோயில் பலவும் கண்ணகியின் அமைதி வடிவத்தின் அடையாளமாகவே அமைக்கப்பட்டன.

அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நடைபெறும் விழாக்களில் சிலம்பு ஒரு இசைக்கருவியாக சேர்க்கப்பட்டது. சிலம்பு வழிபாட்டிலும் இடம்பெற்றுள்ளது. கண்ணகி அணிந்த கால் சிலம்பு பொன்னால் ஆனது என்பதால் தமிழ்மரபுப் பெண்கள் இன்றளவும் காலில் பொன்னால் ஆன சிலம்பு, தண்டை, கொலுசு அணிவதில்லை. தமிழர்கள் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை இன்றளவும் தவிர்த்தே வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படும் மரபு தோன்றியதற்குக் காரணம், குழந்தை சித்திரை வெயிலில் பிறக்கும் எனக் கூறப்பட்டாலும் கண்ணகி கணவனை இழந்த மாதம் என்பதே பிரதானமாக இருந்து பின்னர் மாற்றி கூறப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன்.

கண்ணகி சாபத்தால் பொங்கி எழுந்த இயற்கை தோற்றுவித்த தீயை நாலாப்பக்கமும் எடுத்து வீசியது காற்று. அதனால் இன்றளவும் ஆடி மாதம் வந்தால், காற்று ஆவேசம் கொள்ளுகிறதோ? ஆடிக் காத்துல அம்மியும் அசையும் என்பார்கள்.

கண்ணகி இட்ட சாபத்தை நிறைவேற்ற வந்த தேவதை, தீயில் யாரெல்லாம் மாண்டு போக வேண்டும், யாரெல்லாம் தப்பிக்க வேண்டும்?’ என உத்தரவு கேட்டதாம். அப்போது அவள், ‘தீயவரை விடாதே!’ எனக் கண்டிப்பு காட்டிவிட்டு, நல்லோரை விட்டுவிடுமாறு வேண்டினாளாம். மதுரை எரியத் தொடங்கியதும் அங்கிருந்த நல்ல சக்திகள் வெளியேறத் தொடங்கின. நிலைமை மோசமாவதை அறிந்த மதுரையின் காவல் தெய்வமான மதுராபதி கையைப்பிசைந்தபடி வந்து கண்ணகி முன் தோன்றுகிறாள். கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவனது முற்பிறவி வினையே எனக்கூறி, பாதி எரிந்த மதுரையில் மிச்சத்தைக் காப்பாற்றுகிறாள்.

இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாகவே அம்மன் ஆலய திருவிழாக்களில் தீக் குழியைக் கடந்து செல்லுதல் (தீமிதித்தல்) ஒரு சடங்காக உருவானது என ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள். இதெல்லாம் இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.