சிரிப்பில் மறைவோர் கோடியில் ஒருவரே!

Standard

 

பத்து வருடத்துக்கு மேலாக நட்பு. எனினும் நேரில் சந்தித்துக்கொண்டது என்னவோ இரு முறைதான். அவரிடம் மரியாதை நிமித்தமான பேச்சு முறையை
அடியேன் ஒருநாளும் பின்பற்றியது இல்லை. அவர் வயதைக்கூட மறந்துவிட்டு அதிக உரிமை கொண்டு… ஏன் சில வேலைகளில் அதட்டிக்கூட பேசியிருக்கிறேன். ஆனால், அதெல்லாம் அன்பெனும் குற்றாலச் சாரல் எங்கள் நட்பை மேலும் பிணைக்கவே செய்தது.

அண்மையில் ஏற்பட்ட அவரது மறைவு, தீடீர் இழப்பு என்னை ஆழமாக பாதித்தது. அவர் கவலை ஏதும் இல்லாதவர்தான். ஆனாலும் அவர் மகன் திருமணம் தள்ளிக்கொண்டே வருவது குறித்த வருத்தம் எப்போதாவது வெளிப்படும்.

மறைவிற்கு முதல் நாள் அவரது நூல் விமர்சனம் வந்த செய்தியை பகிர்ந்துகொண்டபோது, பேசினேன். மறுநாள் அவரது செல்பேசி எண்ணில் இருந்து வந்த குருஞ்செய்தி…எழிலவன் மறைந்துவிட்டார் என்ற பேரதிர்ச்சியை வழங்கியது.

மனித வாழ்க்கையில்… மரணம் எப்படி நிகழ வேண்டும் என எனது பாவ புண்ணியக் கணக்குகள் நூலில் பின் வருமாறு…
’நல்ல சாவு என்பது துன்பமில்லாத, தூக்கத்தில் நிகழும் மறைவுகளை முதல் நிலையாக மக்கள் புகழ்வர். தனது மறைவுக்கு முன்பாக அனிச்சைச்செயல் போல சில குடும்பக் கடமைகளுக்கு விழிகாட்டுதல்களை இறந்தவர் வழங்கியிருப்பதை எடுத்துக்
கூறுவர். உடல் விகாரம் அடையவில்லை. தூங்குவது மாதிரியே இருந்தது என்பர். காலங்காலமாக மக்களிடம் வழக்கில் இருக்கும் இத்தகைய நம்பிக்கைகளை உறுதிப்படுத்திச் சாதுகள் சிலர் என்னிடம் பகிர்ந்ததுண்டு.

மனிதனின் பிறப்பு என்பது இவ்வுலகில் முதல் நுழைவு. பூமியில் தனது முதல் சுவாசத்தை இழுத்ததும், அவனது முதல் செயல் அழுகைதான். அந்த அழுகை கேட்கும் வரை மருத்துவர், பதற்றத்தோடு இருப்பர். அழுததும் நிம்மதி கொள்வார். தாயும், உறவும் மகிழ்வர். மனிதனின் முதல் அழுகையில் மகிழ்வர், மற்றவர். ஆனால் இவ்வுலகில் இறுதிமூச்சை விடுகிறபோது அதே மனிதர் சிரிக்கிறவராகவும், மற்றவர் அழுகிறவராகவும் அமைவதே பயணம் முழுமை பெற்றதற்கு அடையாளம்.’ என குறிப்பிட்டுள்ளேன்.

எழிலவனின் மறைவுச் செய்தி கேள்வி பட்ட போது… தன் மகனில் திருமணத்தை நிகழ்த்தி வைக்காமல் செல்கிறாரே என்று என் மனம் ஆதங்கப்பட்டது… பின்னர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விசாரித்தபோதுதான் அந்த நெகிழ்ச்சி சம்பவத்தை கூறினார்கள்…

தான் வசிக்கும் நாகப்பட்டிணத்தில் இருந்து, தனது பிறந்த ஊரானான அன்றைய மேல் மாம்பட்டு கிராமம். (இன்றைய அகண்ட நெய்வேலிக்குள் மறைந்து விட்டது.) தன் மகனுக்கு பெண் உறுதி செய்ய செல்கிறார். அங்கே ஓர் ஆச்சரியம்
அவருக்கு காத்திருக்கிறது.

தன்குழந்தை பருவதிலேயே பெற்றோரை இழந்த எழிலவன்…தான் பிறந்த பொழுது இருந்த கூரை வீட்டின் அதே அடிமனையில் கால மாறுதல்களுக்கு ஏற்ப இன்று எழுப்பி இருக்கும் கட்டிடத்தில் வாசித்து வரும் குடும்பத்தினரிடம் தான் சம்பந்தம் பேச வந்திருக்கிறோம் என்பதை ஐம்பது ஆண்டு நினைவுகளில் பின்னோக்கி சென்று உறுதிப் படுத்தி வியந்து போகிறார்.

பெண்ணை பிடித்துவிட்டது. உணவு உபசரிப்புகள் நிறைவு பெறுகின்றன. பல ஆண்டு தேடல், மகனின் திருமணம் உறுதியானது. மிகுந்த கலகலப்பாக காட்சியளிக்கிறார்.
தன் மகனிடம்…மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று கூறுகிறார்… எங்கெங்கையோ பார்த்தோம். கடைசியில நான் பிறந்த மனையிலே முடிஞ்சுட்டு என்று கூறவே… அதுவே கடைசி வார்த்தைகள் ஆனது.
அந்த கணமே ஆன்மா பிரிந்துவிட்டதாம்.

சாலமன் எனும் மீன் இனம் ஓர் அபூர்வ வாழ்வியல் இரகசியம் கொண்டது. நதியில் உற்பதியாகும் அம்மீன் குஞ்சுகள் கடலை நோக்கி பயணிக்கும். கடலிலேயே வசிக்கும். அந்திம காலத்தில் தான் பிறந்த நதியை தேடி வரும். வந்து முட்டையிட்டு விட்டு, அங்கேயே மாண்டு போகும். அப்படி ஓரு அமைப்பை எழிலவனின் மரணம் வெளிப்படுத்தியுள்ளது. தான் பிறந்த மண்ணில் அடுத்த தலைமுறையான தன் மகனுக்கு வாழ்வை தொடங்கி வைத்துவிட்டு தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார், எழிலவன்.

அவரது மனைவி பேராசிரியை எழிலாதிரை அவர்கள் சொன்னார்கள் ஓரு மாதத்திற்கு முன்பு ஆய்வு பணி ஓன்றிருக்காக என்னுடன் துணையாக டெல்லி வந்தார். அப்போது சொன்னார்…இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம். எனக்கு அந்திமகாலம் நெருங்கிவிட்டது. இன்னொரு முறை இவ்வளவு தொலைவு வர இயலுமோ தெரியாது.. அதனால் ஹரிதுவார் சென்று வருவோம் என்றார். அப்படி அவர் சொன்னபோது வயதாகி விட்டதை அப்படி கூறுகிறார் என எடுத்துக்கொண்டேன். அவர் விருப்பப்படி அங்கு சென்றும் வந்தோம் என்றார் நாதழுதழுக்க….
மரணம் உயர்ந்த உள்ளங்களுக்கு
முன்னரே உணர்த்தப்படுகின்றன… அவ்வளவுதான்.!

அதிர்ச்சியில் மறைவோர் பலர் உண்டு. சிரிப்பில் மறைவோர் கோடியில் ஒருவரே!

-யாணன்

About yaanan(யாணன்)

சொந்த ஊர் என எதையும் சொல்வதில்லை. உண்மையில் சொந்தம் என்று எதுவும் யாருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் சில காலம் சில, சொந்தமானவைப் போல் தொடருகின்றன. பிரபஞ்சத்தின் உயிர்ப்பை நான் மரங்களில் தான் பார்க்கிறேன். என்னைத் தூண்டும் சக்தியாக மரங்கள் இருக்கின்றன. இதுவரை நூற்றுக்கு மேலான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறேன். மரணத்திற்கு முன்பாக மேலும் பல நடக்கூடும். நான் எழுதும் ஆத்ம ஞான கருத்துகளே எனது அழமான நம்பிக்கை. அதுபோலவே எனது வாழ்க்கையையும் உணருகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s