Tag Archives: அம்மா

இரை – சிறுகதை

Standard
eraai

மாலை நேரம் தான் ‘மடையான் ‘ பறவை அதிகமாகச் சிக்கும். அதுவும் வானம் கொஞ்சம் மப்பும் மந்தாரமாக இருந்துவிட்டால் போதும். குறைந்தது மூன்று ஜோடியாவது விழும். காத்தமுத்து, மடையான் பிடிப்பதற்காகக் கண்ணி வைத்திருந்தான்.

குடிசைக்குள் படுத்திருந்த அவனுடைய யோசனை முழுவதும் ‘கண்ணியில் ஏதாவது மாட்டியிருக்குமா?’ என்ற கேள்வியிலேயே இருந்தது.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவனது குழந்தைகள் சத்தமாகக் கைத்தட்டிக் கொண்டே….‘‘ மடையான், மடையான் பூப்போடு. ஆளுக்கு ரெண்டு பூப் போடு ‘‘ என கும்பலாகப் பாடினார்கள்.

சத்தம் கேட்ட காத்தமுத்து, திடுதிடுவென்று எழுந்து வாசலுக்கு வந்தான். வானத்தில் நூற்றுக்கணக்கான மடையான்கள் கூட்டமாகத் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.

iraai

அண்ணாந்து பார்த்த அவன், தோளில் கிடந்த துண்டை உதறி முண்டாசு கட்டியபடி குடிசைகுப் பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் இறங்கினான்.

காத்தமுத்துவைக் கண்டதும் குளித்துக் கொண்டிருந்த அவணது மனைவி பொன்னம்மாள் தலையைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்:

‘‘ இன்னிக்காவது அம்புடுற மடையானை வூட்டுக்குக் கொண்டா. புடிக்கிறதையெல்லாம் வித்து வித்துத்தான் என்னத்த நெறஞ்சது. பிள்ளைகளும் ஆசையா ஒவ்வொரு நாளும் கேட்டுக்கிட்டு கிடக்குதில்ல ‘‘ என்றாள்.

அவள் சொல்வதைக் காதில் வாங்காதவன் போல், வரப்பில் ஏறி நடக்க ஆரம்பித்தான்.

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சையாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு மத்தியில்… ஒருவித எதிர்பார்ப்போடு நடந்தான்.

வருடந்தோறும் ஜப்பசி கடைசி, கார்த்திகை மாதங்களில் மடையான் பிடிக்க வயல்களில் கண்ணி வைப்பான்.

பயிர் வளர்ந்துவருகிற வயல்களில்,தண்ணீர் கிடக்குற இடமாகப் பார்த்து…மெல்லிய நைலான் நரம்புகளில் முடிச்சுகள் போட்டு, முளைக்குச்சியில் அடித்து வைப்பான்.

இரை தேடி இறங்கும் மடையான்கள், மெலிதான நரம்பு முடிச்சுக்குள் காலை நுழைத்துவிடும். பின்பு, பறக்க முடியாமல் காலில் சிக்கியிருக்கும் முடிச்சு இறுக்கிக் கொள்ளும். இந்த வித்தையில் அவன் ரொம்பவும் கைதேர்ந்தவன்.

பிடிக்கிற மடையான்களை அவனே சந்தையில் விற்றுவிடுவான். ஜோடி நாற்பது ரூபாய் வரைக்கும் போகும்.

indianpondheronMAAjan01சில நாட்களில் மூன்று நான்கு ஜோடிகள்கூட மாட்டிக் கொள்ளும். சில நேரங்களில் ஓன்றுகூட விழாது.

நிறையப் பிடித்தால் நேராகப் பக்கத்து டவுனுக்குப் போய்விடுவான். அங்கே தெருத்தெருவாகக் கூவிக் கொண்டே விற்பனை செய்வான்.

பிடிக்கிற மடையானை சமைத்துத் தின்ன வேண்டும் என்கிற ஆசை ஒரு நாளும் அவனுக்கு வந்ததில்லை.

அவனுடைய பொருளாதாரச் சூழ்நிலைக்கு, விற்றுக் காசாக்குவதுதான் புத்திசாலித்தனம் என நினைத்துக் கொள்வான்.

வீட்டில் குழந்தைகள்… ‘ அப்பா மடையான் பிடிச்சுகிட்டு வரலையா ‘ என்று கேட்கும் போது சங்கடமாக இருக்கும். பொன்னம்மாளும் சில நாள் கோபித்துக்கொள்வாள்.

காத்தமுத்து , ஓடைப்பங்கை நெருங்கும்போதே வழக்கம் போல் அவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே, கண்ணி வைத்திருக்கும் வயலில் இறங்கி… கணுக்கால் சேற்றில் அகலக்கால் போட்டு நெருங்கினான்.

ஒற்றை மடையான் ஒன்று சுக்கில் சிக்கி… விடுபட முடியாமல் இறக்கையை அடித்துக்கொண்டு தவித்தது. லாவகமாக அதன் கழுத்தைக் கவ்விப் பிடித்துத் தூக்கினான்.

‘ என்னை விட்டுவிடு ‘ என்பதுபோல் பிடித்திருக்கும் அவனது கைகளின் மேல் இறக்கைகளால் படபடத்தது.

அதனுடைய உடலிலிருந்தே ஒரு இறகைப் பிடுங்கி, அதன் கண் ரப்பை மேல் குத்தி இழுத்துக் கட்டினான். இரண்டு பக்கத்து இறக்கைகளையும் முறுக்கி முதுகுப்பக்கம் வைத்தான்.

இனி அதனால் பறக்க முடியாது!

ஒற்றை மடையானாக விழுந்தால்… வியாபாரத்துக்குப் பெரும் சங்கடம். கொஞ்சம் கறிதான் இருக்கும். யாரும் வாங்க மாட்டார்கள்.

யோசித்தான். ‘பொன்னம்மாளும் நீண்ட நாளாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். பேசாமல் வீட்டுக்கே கொடுத்துவிட்டால் என்ன…?‘ என்று பட்டது.

காத்தமுத்து தூரத்தே குடிசையை நோக்கி மடையானோடு வருவதைப் பார்த்த அவனது குழந்தைகள் கும்மாளமிட்டன.

‘ நிஜமாகவே எடுத்து வருகிறாரா…?‘ என குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்த பொன்னம்மாளும் மகிழ்ந்தாள்.

அதே வேளையில்… ஊர்க் கடைசியில் இருக்கிற ஜயனார் கோயில் மூங்கில் தோப்பில் இறக்கை முளைக்காத மூன்று மடையான் குஞ்சுகள்.

‘இரை தேடப்போன அம்மாவை இன்னும் காணோமே‘ என்கிற பீதியில் கூட்டுக்குள் கிடந்த குஞ்சுகள் கலவரம் அடைந்தன.

வழக்கமாக இந்த நேரத்துக்கு எல்லாம் அம்மா வந்துவிடுவாளே… இன்று இன்னும் காணோமே. இரவு வந்துவிட்டால், கண்வேறு தெரியாதே என்ற கவலையில்…அவை ‘கீச்…கீச்…‘ என அழ ஆரம்பித்தன. அந்தச் சத்தம் மூங்கில் தோப்பு முழுவதும் எதிரொலித்தது.

குஞ்சுகள் தேடுகிற அம்மா இனி வர மாட்டாள்.

அவள் காத்தமுத்து வீட்டு மண் சட்டியில் கொதித்துக் கொண்டிருந்தாள்.

தனது மூன்று குஞ்சுகளுக்காக இரை தேடப்போன ஒரு அம்மாவைத் தனது மூன்று குழந்தைகளுக்கு உணவாக்கி விட்டாள் இன்னொரு அம்மா.

அம்மா, அம்மாவைச் சமைக்கிறாள்.

சிறுகதை வெளியான இதழ்- ஆனந்த விகடன் 26.1.1997

வம்ச தெய்வமாய் அம்மா…

Standard


radhabai

radhabai

அம்மா

நீ
பிறப்பிலும்
கடைசிப் பெண்.
பூப்பெய்தியதிலும்
தாமதம்.
திருமணமும்
அப்படித் தான்.
மரணம் மட்டும்
ஏன் சீக்கிரம் ?-
 -யாணன் 

னக்கு அப்போது எட்டு வயது இருக்கலாம். அடியற்கமங்கலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு ரயிலில் நானும் அம்மாவும் பயணிக்கிறோம்.

எங்கள் எதிரே நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் என் அம்மாவிடம் கேட்டார். “இவன் தான் உனக்கு தலச்சம்பிள்ளையா ?

இல்லை இவனுக்கு முன்னே ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இவன் இரண்டாவது பிள்ளை” என்று பதில் சொன்னாள் அம்மா.

அம்மாவின் பதில் எனக்குப் புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ரயிலை விட்டு இறங்கியதும் ஆச்சரியமாய் கேட்டேன். “ஏம்மா, எனக்கு முன்னாடி ஒரு பிள்ளை செத்துட்டா ? இதுவரைக்கும் எனக்குச் சொல்லவேயில்லை ?”

அம்மா சொன்னாள்…. “இல்ல, அந்தப் பொம்பளையைப் பார்த்தா ஏதோ மந்திரவாதி மாதிரி இருந்திச்சி. மந்திரவாதிங்க தலைச்சம்பிள்ளையைக் கண்டா மைப்போட்டு பிடிச்சுட்டு போயிடுவாங்கன்னு சொல்லுவாங்க. அந்தப் பயத்துல நீ தலச்சன் பிள்ளையில்லேன்னு பொய் சொன்னேன்” என்றாள்.

கழுகிடமிருந்து, குஞ்சைக் காப்பாற்றும் தாய்க்கோழியைப் போல என்னை முந்தானையில் பொத்திக் கொண்டாள். பின்னாளில் நான் வளர்ந்து, எனக்குத் திருமணமாகி குழந்தைப் பிறந்தபிறகும் கூட என்னைப் பாதுகாப்பதில் அம்மா எள்ளளவும் கவனம் சிதறியதில்லை.

இன்னமும் என்னை ஆராய்வதும், என் செயல்களைக் கண்காணிப்பதுமாய் இருக்கிறியே ? எது நல்லது எது கெட்டதுன்னு என் வயசுக்குத் தெரியாதா ? சலிப்பும் கேலியுமாய் அப்போது நான் பேசியதுண்டு.

இன்று அம்மா இல்லை. இப்போது தான் அந்த வித்தியாசம் புரிகிறது. என் பாதுகாப்பில் ஏதோ ஒன்று குறைந்துவிட்டதாக உணர முடிகிறது.

அம்மா வாழ்ந்தது அறுபத்தியிரண்டு வருடங்கள் தான். அதில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தது ஏராளமோ தாராளமோ இல்லை.

இத்தனை வருடங்களில் ஒரு இலட்சம் முறையாவது தேநீர் தயாரித்து விருந்தினர்களுக்கு வழங்கியிருப்பாள். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் கண்ட சுகங்கள் குறைவு.

அம்மாவிற்கு சமூக அறிவு, கலையுணர்வு, பொது அறிவு, இவையெல்லாம் ரொம்பக் குறைவு எனக் கருதுவேன். அதனாலேயே சபைகளில் அவர்களை முன்னிறுத்த யோசிப்பேன். அறியாமையை கேலி செய்து பேசுவேன்.

மரணம் நெருங்கிவிட்ட நிலையில் … “நீ நல்லாயிருப்பே” என என்னையும் எனது மனைவியையும் ஆசீர்வதித்தபோது …. அம்மா எனக்குப் புதிதாய்த் தெரிந்தாள். அவளிடம் வாழ்வில் முழுமையடைந்த திருப்தியும், அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட ஞான நிலையும் முகத்தில் குடி கொண்டிருந்தது. என்னையறியாமல் கையெடுத்து வணங்கினேன்.

துரோகம், ஏமாற்றம், பழிச்சொல், கடன் சுமை, நோய் இப்படியான காட்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் பல மாற்றங்களைச் சந்தித்து, கதாபாத்திரங்கள் ஒன்று கூடி சிரித்த முகமாகச் சுபம் சொல்வது போலத் தான் அம்மாவின் மரணமும் நிகழ்ந்தது.

கடைசி ஒரு வருடத்தில் தான் அம்மாவின் வாழ்வில் எத்தனை மாற்றங்கள், கடைசி நிமிடம் தான் எத்தனை அழகாய், அமைதியாய், கரம் பிடித்த கணவன், கொண்டு வந்த மருமகள், வாழைக் கன்றுகளாய் பேரக் குழந்தைகள், உடன் பிறந்த மூத்த சகோதரி சூழ்ந்திருக்க பெற்றெடுத்த மகன் மடியில் மரணத்தை ஏற்றுக் கொண்டாள்.

அம்மாவின் புகைப்படம் தயாராகி வீட்டிற்கு வந்தது. அம்மாவின் பேரன் கௌதம புத்தன் புகைப்படத்தை கைகளில் புடுங்கிக் கொண்டான். அந்தப் படத்தைப் பார்த்துப் பேசினான். “பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க. நல்லாயிருக்கீங்களா ?” மழலையாய் கேட்டான். உடன் இருந்த எங்கள் கண்களில் ஒதுங்கியது கண்ணீர்.

அம்மாவைப் பார்க்க வந்த ஒன்று விட்டச் சின்னம்மா உஷா சொன்னாள். “அம்மாதான் எனக்கு இரிஞ்சூர் குளத்துல குடத்தைக் கவிழ்த்து நீச்சல் கற்றுக் கொடுத்தது. நம்ம உறவுக்காரப் பெண்களிலேயே நான் பார்த்த வரைக்கும் ஈகோ இல்லாத பெண் அம்மா தான். ஏற்றத்தாழ்வு பாக்காம எல்லார்க்கிட்டயும் அன்பா பழகும் குணம் தான் அம்மாவோட தனித் தன்மை” அம்மாவைப் பற்றி சின்னம்மா வெளியிட்ட இந்த அபிப்பிராயம் தான் அவரது வாழ்க்கைக்குக் கிடைத்த சான்று.

இவ்வுலகில் வாழ்ந்த மானுடர்கள் தான் பிற்காலத்தில் வழிபடும் தெய்வங்களாக மாறினார்கள். குல தெய்வங்களாக அடையாளப்படுத்தப் பட்டார்கள்.

இனி இந்த அம்மா ராதாபாய் எனக்கும் எனது வம்சத்திற்கும் வழிபடும் தெய்வம்…. வம்ச தெய்வம்

..

ராதாபாய்
கோவிந்தசாமி – லெட்சுமி
தம்பதியரின் நான்காவது மகள்

பிறப்பு 1943

திருமணம் 1969

குழந்தைப் பேறு 1971

மரணம் 27.10.2005

வியாழக் கிழமை
நேரம்
காலை 8 மணி 8 நிமிடம்

முதல் சுவாசம்
இரிஞ்சூர் கிராமம்,  வடக்கு திசை வீடு

இறுதி சுவாசம்
புனித தோமையார் மலையடிவாரம், சென்னை, தெற்கு திசை வீடு.