Tag Archives: ஆடி மாதம்

ஆடி மாதம் கண்ணகி அம்மனை வழிபடுங்கள்..!

Standard

வேம்பின் ஓர் இலையைத் தலையில் சூடினால் போதும்! அங்கே தாய்த் தெய்வம் கண்ணகி அம்பாளின் அருள்தானே வரும் எனும் நம்பிக்கை ஆதித்தமிழர்களிடம் இருந்து வருகிறது..!!
ஆடி மாதம், கண்ணகி அம்மன் வழிபாடு பற்றின ஓர் அறிமுகத்தினை தருகிறார் திரு.யாணன்..கண்ணகி அம்மனை வழிபட்டு, பேரருள் பெறுவோம்..!

சாபம் பலிக்கும் !

Standard
kannaki
கடலும், மலையும் காண்போர் மனதை குழந்தையாக மாற்றும் வல்லமைக்கொண்டது, இல்லையா? மன அழுத்தம் மிகும் காலங்களில் மனிதர்கள் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று இளைப்பாறுவது இன்றளவும் இருக்கும் இயல்புதானே! இப்படியொரு இயல்பின் அடிப்படையிலே இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசன் சேரன் செங்குட்டுவன், தன் ராஜ்ஜியத்தின் கீழ் இருக்கும் செங்குன்று எனும் மலைக்கு வனபோஜனம்(பிக்னிக்) செல்கிறான்.  பேரியாறு ஆற்றங்கரை ஓட்டி அமைந்துள்ள இம்மலைக்கு அவ்வப்போது படைபரிவாரங்களுடன் சென்று ஓய்வெடுத்து வருவது அவனது வழக்கம்.
.
அன்று அவனுடன், அரசி வேண்மாள், தம்பி இளங்கோ, அவருடைய நண்பரான சீத்தலைச்சாத்தனார் உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர். பசுமைமிகு இயற்கையின் அழகு, காட்டில் இருந்து வீசும் சந்தனம், ஜவ்வாது மற்றும் செண்பகம், மரமல்லி உள்ளிட்ட மலர்களின் மணம், சிறுபறவைகளின் ஒலிகள் என இயற்கை எல்லோர் மனதையும் சிறைப்பிடிக்கிறது.
.
அரசனின் வருகையை அறிந்த அம்மலைவாழ் மக்களான வேடுவர்கள், தங்களின் பாரம்பரிய மரியாதையைச் செய்து, யானையின் வெள்ளிய கொம்புகளையும் அகிற்கட்டையின் குவியலையும்,  மான் மயிராகிய வெண்சாமரையையும், – தேன் குடங்களையும், சந்தனக் கட்டைகளையும் சிந்துரக் கட்டிகளையும்,  நீலக் கல்லின் திரளையும் அழகிய கத்தூரியையும்,  ஏலக்கொடிகளையும் கரிய மிளகு கொடிகளையும், கூவைக் கிழங்கின் நீற்றினையும், கொழுவிய கவலைக்கொடியின் கிழங்குகளையும்,  தெங்கம் பழங்களையும் இனிய மாவின் பழங்களையும், பச்சிலை மாலையையும், – பலாப் பழங்களையும், வெள்ளுள்ளியையும், கரும்பினையும், – பூங்கொடியினையும், பெரிய தாற்றினையுடைய வாழையின் பெரிய பழம் நிறைந்த குலையினையும், – ஆளி சிங்கம் புலி யானை குரங்கு கரடி என்பவற்றின் குட்டிகளையும், மலையில் துள்ளி விளையாடும் வருடை மானையும்,  இளமை பொருந்திய மான் குட்டியையும் கத்தூரிக் குட்டியையும்,  குற்றமற்ற கீரியையும்,  ஆண் மயிலினையும், புழுகு பூனையின் குட்டியையும், காட்டுக் கோழியையும் இனிய மொழி பேசும் கிளியினையும், குன்றக் குறவர் தம் தலைமீது சுமந்து வந்து வழங்கி மகிழ்ந்தனர். இவையெல்லாம் அரசன் வருகையின்போது வழக்கமானதுதான் என்றாலும் இந்தமுறை அம்மக்களின் முகக்குறிப்பில், கண்களில் ஏதோ ஒரு தவிப்பும், பரவசமும் தென்படுவதைக் கவனித்த சேரன்.. அரசனிடம் கூற ஏதேனும் விஷேச செய்தி உள்ளதா? எனக் கேட்கிறான்.
.
அப்போது அம்மக்கள் சற்றே தள்ளித்தெரியும் ஒரு வேங்கை மரத்தை வணங்கியபடியே சுட்டிக்காட்டி.. சில நாட்களுக்கு முன்பு இந்த மலையில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதைக் காண நேர்ந்ததில் ஏற்பட்ட  அதிர்வில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. என குறிப்பிடுகின்றனர். ஒட்டு மொத்த மக்களின் வியப்பும் அரசனை கூர்மைப்படுத்துகிறது.
.
அப்போது ஊர் பெரியவர்கள் விரிவாகக் கூறுகிறார்கள்… சில வாரங்களுக்கு முன் விரிந்த தலைக்கோலமாக, துயரமிகு கண்களோடு இளம்பெண் ஒருத்தி, அந்த வேங்கை மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்தாள். இடது பக்க முலை அறுபட்ட நிலையில் இருந்தாள். இந்த தேசத்தைச்  சேர்ந்தவளாக தெரியவில்லை.
.
பலரும் பலவாறு கணிந்தும், பணிந்தும் ’நீ யாரம்மா? என்ன நடந்தது?’ என கேட்டோம். எங்களின் எந்த வினாவுக்கும் பதிலில்லை. மவுனமாகவே இருந்தாள். உண்ண உணவும், மாற்று உடையும் தந்தோம். ஏற்கவில்லை. மிகுந்த பிடிவாதத்திற்கு பின் ஒரே ஒருமுறை கணவனை இழந்த பாவி நான் என மட்டும்  கூறினாள். உணவும், உறக்கமும் இல்லாமல் பதினான்கு நாட்கள் அந்த மரத்தடியின் கீழே அமர்ந்திருந்தவளின் அருகில் ஒரு இரவு திடீரென வானுலகில் இருந்து ஒளிபிராவாகமாய் ஒரு  தெய்வ வாகனம் வந்து இறங்கியது. அதில் அவளைக் ஏறிக்கொண்டு  விண்ணில் மறைந்தது. எனத் தாங்கள் கண்ட காட்சியை உடல் சிலிர்க்கப் பேசினர்.
மலைமக்கள் விவரித்த அந்தக் காட்சியைக் கேட்ட அரசன் ஆச்சரியப்பட்டான். அப்போது அருகில் இருந்த புலவர் சீத்தலைச்சாத்தனார் சற்றே அவர் அருகில் பணிந்து அரசே அந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் குறித்த தகவல்கள் எனக்கு கிடைத்தன. அவள் பெயர் கண்ணகி. சோழ நாட்டில் இருந்து பிழைக்க பாண்டியநாட்டிற்கு அண்மையில் தன் கணவனோடு வந்திருக்கிறாள். வந்த இடத்தில் அரண்மனைப் பொற்சிலம்பை திருடிவிட்டதாக பொய்குற்றம் சுமத்தி கள்வன் பட்டம் கட்டி அவள் கணவனைக் கொன்றுவிட்டார்கள். செய்தியறிந்து கடும் சினம் கொண்ட அவள், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் சபைக்கே நேரில் சென்று, தன் கையில் இருந்த மற்றொரு சிலம்பை வைத்து ஆதாரம் காட்டி தன் கணவன் நிரபராதி என நிரூபித்திருக்கிறாள்.
பாண்டிய மன்னன் தன் சபையின் நீதி மாண்டு விட்டதே என அதிர்ச்சி கொண்டு நெஞ்சைப்பிடித்தவன் அந்த கணமே மயங்கி விழுந்து மாண்டான். அதைத்தொடர்ந்து அவனது மனைவி கோப்பெருந்தேவியும் அதே அதிர்ச்சியால் மாண்டாள்.
.
கண்ணகி தன் மண்ணில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்களின் வரலாற்றைக் கூறி, ‘நானும் அவர்களைப் போன்ற ஒரு பத்தினியாகின் இந்த மதுரை தீக்கரையாகட்டும்’ எனச் சாபம் இட்டு; தன் இடமுலையை  அறுத்து, வீதியில் எறிந்துவிட்டு வந்திருக்கிறாள்.   அங்கிருந்து மேற்கு நோக்கி புறப்பட்டவள் வைகைக்கரை வழியே  வருஷநாடுமலை வந்து சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலையான இங்கு  தங்கள் அரச எல்லைக்குள் வந்து அமர்ந்திருக்கிறாள். எனத் தனக்குக்கிடைத்த தகவல்களைப் பகிர்கிறார்.
.
அதைக்கேட்ட சேரநாட்டு அரசன் இன்னும்  அதிர்ந்துபோகிறான்…ஆச்சரியம் குறையாமல் அவன் கூறுகிறான்…பாண்டிய மன்னன், செய்த தவறுக்காக மாண்டுபோனான் என்ற செய்தி எத்தனைப் பெருமைக்குரியது. வளைந்த செங்கோல் நிமிர்ந்துவிட்டது. ஒரு சாமனியப்பெண்ணின் சத்தியம், உறுதிக்கு முன் அரசனின் உயிர் சாதாரணம் ஆகிவிட்டது. சாபம் ஒரு ஊரையே எரிக்கிறது.  அரச வாழ்க்கை சுகமானது அல்ல. பழி பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டிய ஒன்று. நாட்டில் மழைவளம் குறைந்தால், அரசனின் நிம்மதி குலைந்து போகும். குடிமக்களுக்கு தீமை நேர்ந்தால் அரசனை அச்சம் சூழ்ந்துவிடும். அரச குடும்பத்தில் பிறப்பது பாக்கியம் அல்ல. துயரமே! என தன் மன உணர்வுகளை அருகிலிருப்போரிடம் பகிர்ந்தவன், தன் மனைவியைப் பார்த்து பாண்டிய மன்னனைத் தொடர்ந்து மாண்டு போன அரசி உயர்ந்தவளா? கணவனின் இறப்பை பொறுக்க முடியாமல் பொங்கி யெழுந்து ஊரை தன் சாப வலிமையால் எரித்து இங்கு வந்து உண்ணாநோன்பிருந்து வானுலகம் சென்ற இந்தப் பெண் உயர்ந்தவளா? என வினவினான்.
.
சேர நாட்டு அரசி இருவர் கற்பையும் போற்றிவிட்டு, நம்நாட்டிற்கு நடந்து வந்த கண்ணகியை நாம் வணங்கத்தக்கவளாக கருத வேண்டும் என்கிறாள். அதைக் கேட்ட அரசன் அருகில் இருந்த அமைச்சர்களைப் பார்க்கிறான். அவர்கள் உடனே பொதியமலையிலிருந்தோ, வடக்கே இமைய மலையிலிருந்தோ கல் கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை அமைக்கலாம் என்கின்றார்கள்.
இந்த உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்த அரசனின் தம்பி இளங்கோ தன் நண்பனான புலவர் சாத்தனாரிடம் இந்தப் பத்தினியின் வாழ்வை ஒரு காப்பியமாக எழுது என்கிறார். அதற்கு அவரோ கண்ணகி வாழ்வில் சோழ, பாண்டிய, சேர என மூன்று நாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அது பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஒரு புலவரைவிட அரச குடும்பத்தைச் சேர்ந்த தாங்கள் ஈடுபட்டால் பணி எளிதாக அமையும் என எடுத்துக்கூறுகிறார். அதன்படி அரசாட்சியில் அண்ணனுக்குப் போட்டியாக மாறும் சூழல் ஒருநாளும் வரக்கூடாது என்பதற்காக தானாக முன் வந்து புத்தத் துறவியாக மாறிய இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எனும் காவியத்தை சிறப்புற எழுதி முடித்தார்.
.
தர்ம சத்தியநெறி மிகுந்த ஒரு பத்தினியின் கதை என்பதால் அது அழியாக் காவியமாக இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்னும் சிலிர்க்க வைக்கிறது. அதுமட்டுமல்ல கண்ணகி சிலம்பை பாண்டியச்சபையில் ஓங்கி அடித்தபோது  சிதறிய மணிகள் அங்குமட்டுமல்ல தமிழ் மண் எங்கும்  விதையாக விழுந்து விழுதாக இன்றும் எழுந்து நிற்கிறது.
.
தமிழ் மண்ணில் கண்ணகிக்கென தனிக்கோயில் பிரபலமாக இல்லையே என்றாலும், அவளே பல்வேறு பழமையான ஆலயங்களிலும், அம்மன் வடிவில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
.
தமிழ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் கண்ணகியின் வாழ்வில் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தது எல்லாம் ஆடி மாதத்து வெள்ளிகிழமைகளில்தான் என்று.(தமிழறிஞர் மு.வரதரசனார்) அவள் மதுரையை எரித்ததும் ஒரு ஆடி வெள்ளியில்தான். அதனாலே பிற்காலத்தில் அம்மன் கோயில்கள், வெள்ளிக்கிழமைகளில் முக்கியத்துவம் பெற்றன. வெவ்வேறு பெயர்களில் எழுப்பப்பட்டுள்ள அம்மன் கோயில் பலவும் கண்ணகியின் அமைதி வடிவத்தின் அடையாளமாகவே அமைக்கப்பட்டன. அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நடைபெறும் விழாக்களில் சிலப்பு ஒரு இசைக்கருவியாக சேர்க்கப்பட்டது. சிலம்பு வழிபாட்டிலும் இடம்பெற்றுள்ளது. கண்ணகி அணிந்த கால் சிலம்பு பொன்னால் ஆனது என்பதால் தமிழ்மரபு  பெண்கள் இன்றளவும் காலில் பொன்னால் ஆன சிலப்பு, தண்டை, கொலுசு அணிவதில்லை. தமிழர்கள் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை. இன்றளவும் தவிர்த்தே வருகின்றனர்.  அதுமட்டுமல்லாது ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படும் மரபு தோன்றியதற்கு காரணம், குழந்தை சித்திரை வெயிலில் பிறக்கும் என  கூறப்பட்டாலும் கண்ணகி கணவனை இழந்த  மாதம் என்பதே பிரதானனாக இருந்து பின்னர் மாற்றிகூறப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன்.
.
  கண்ணகி இட்ட சாபத்தை நிறைவேற்ற வந்த தேவதை, கண்ணகியிடம் தீயில் யாரெல்லாம் மாண்டு போக வேண்டும், யாரெல்லாம் தப்பிக்க வேண்டும் என உத்தரவு கேட்டதாம். அப்போது அவள் தீயவரை விடாதே என கண்டிப்பு காட்டிவிட்டு, நல்லோரை விட்டுவிடுமாறு கூறுகிறாள். மதுரை எரிகிறது; அங்கிருந்த நல்ல சக்திகள் வெளியேறுகின்றன. நிலைமை மோசமாவதை அறிந்த மதுரை மண்ணின் காவல் தெய்வமான மதுராபதி கையைபிசைந்தபடி வந்து கண்ணகி முன் தோன்றிக் கோவலன் கொலைப்பட்டதற்கான காரணம் அவனது முற்பிறவி வினையே எனக்கூறி, பாதி எரிந்த மதுரையை காப்பாற்றுகிறாள்.
.
இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாகவே திரெளபதி அம்மன் ஆலய திருவிழாக்களில் தீ குழியைக் கடந்து செல்லுதல்(தீமிதித்திருவிழா) ஒரு சடங்காக உருவானது என ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள்.
.
கண்ணகியின் சிறப்பைக் கேள்விப்பட்ட முதலாம் இராசராசன், மங்களதேவி மலைக்கு வந்து, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கியுள்ளான். இக்கோயில் சிங்கள நாச்சியார் – செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக மாறியுள்ளது.
கண்ணகி கோயில் பெருவிழாவில் சேரமன்னன் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு எனும் இலங்கை மன்னன் விழாவில் கலந்து கொண்டான். அவனால் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் “அங்கணக்கடவை” எனும் இடமாம். சிங்களநாட்டில் “பத்தினி தெய்யோ” என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும். கேரளாவில் கொடுங்கநல்லூர் பகவதி ,மங்கள தேவி ,அட்டுகல் அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறது. மலைவாழ் மக்களான வேடுவர்கள், அவளை அந்த மலையின் பெயரிலேயே “மங்கள தேவி” என்ற பெயரில் தெய்வமாக வணங்கியுள்ளனர்.
இக்காப்பியம் மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கூறுகிறது. அவை:
  1) அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
 2)  புகழ்மிக்க பத்தினியை பெரியோர் தொழுவார்.
  3)  ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்
.
   இன்றும் தமிழ்நாடு, கேரளா எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையின் மீது  வண்ணதிபாறை என்னும் இடத்தில் கண்ணகி கோயில் உள்ளது. இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கண்ணகியை தெய்வமாக வணங்கிய அக்காலமலை வேடுவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரா பௌர்ணமியன்று பூஜை செய்தனர். அப்பழக்கம் தற்போதும் தொடருகிறது. சிலப்பதிகாரம் சொல்லும் “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்னும் வாசகத்துக்கு ஏற்ப , நாமும் அன்றைய நாள் அங்கு கூடுவோம்.
-யாணன்