Tag Archives: இரிஞ்சூர்

வம்ச தெய்வமாய் அம்மா…

Standard


radhabai

radhabai

அம்மா

நீ
பிறப்பிலும்
கடைசிப் பெண்.
பூப்பெய்தியதிலும்
தாமதம்.
திருமணமும்
அப்படித் தான்.
மரணம் மட்டும்
ஏன் சீக்கிரம் ?-
 -யாணன் 

னக்கு அப்போது எட்டு வயது இருக்கலாம். அடியற்கமங்கலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு ரயிலில் நானும் அம்மாவும் பயணிக்கிறோம்.

எங்கள் எதிரே நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் என் அம்மாவிடம் கேட்டார். “இவன் தான் உனக்கு தலச்சம்பிள்ளையா ?

இல்லை இவனுக்கு முன்னே ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இவன் இரண்டாவது பிள்ளை” என்று பதில் சொன்னாள் அம்மா.

அம்மாவின் பதில் எனக்குப் புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ரயிலை விட்டு இறங்கியதும் ஆச்சரியமாய் கேட்டேன். “ஏம்மா, எனக்கு முன்னாடி ஒரு பிள்ளை செத்துட்டா ? இதுவரைக்கும் எனக்குச் சொல்லவேயில்லை ?”

அம்மா சொன்னாள்…. “இல்ல, அந்தப் பொம்பளையைப் பார்த்தா ஏதோ மந்திரவாதி மாதிரி இருந்திச்சி. மந்திரவாதிங்க தலைச்சம்பிள்ளையைக் கண்டா மைப்போட்டு பிடிச்சுட்டு போயிடுவாங்கன்னு சொல்லுவாங்க. அந்தப் பயத்துல நீ தலச்சன் பிள்ளையில்லேன்னு பொய் சொன்னேன்” என்றாள்.

கழுகிடமிருந்து, குஞ்சைக் காப்பாற்றும் தாய்க்கோழியைப் போல என்னை முந்தானையில் பொத்திக் கொண்டாள். பின்னாளில் நான் வளர்ந்து, எனக்குத் திருமணமாகி குழந்தைப் பிறந்தபிறகும் கூட என்னைப் பாதுகாப்பதில் அம்மா எள்ளளவும் கவனம் சிதறியதில்லை.

இன்னமும் என்னை ஆராய்வதும், என் செயல்களைக் கண்காணிப்பதுமாய் இருக்கிறியே ? எது நல்லது எது கெட்டதுன்னு என் வயசுக்குத் தெரியாதா ? சலிப்பும் கேலியுமாய் அப்போது நான் பேசியதுண்டு.

இன்று அம்மா இல்லை. இப்போது தான் அந்த வித்தியாசம் புரிகிறது. என் பாதுகாப்பில் ஏதோ ஒன்று குறைந்துவிட்டதாக உணர முடிகிறது.

அம்மா வாழ்ந்தது அறுபத்தியிரண்டு வருடங்கள் தான். அதில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தது ஏராளமோ தாராளமோ இல்லை.

இத்தனை வருடங்களில் ஒரு இலட்சம் முறையாவது தேநீர் தயாரித்து விருந்தினர்களுக்கு வழங்கியிருப்பாள். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் கண்ட சுகங்கள் குறைவு.

அம்மாவிற்கு சமூக அறிவு, கலையுணர்வு, பொது அறிவு, இவையெல்லாம் ரொம்பக் குறைவு எனக் கருதுவேன். அதனாலேயே சபைகளில் அவர்களை முன்னிறுத்த யோசிப்பேன். அறியாமையை கேலி செய்து பேசுவேன்.

மரணம் நெருங்கிவிட்ட நிலையில் … “நீ நல்லாயிருப்பே” என என்னையும் எனது மனைவியையும் ஆசீர்வதித்தபோது …. அம்மா எனக்குப் புதிதாய்த் தெரிந்தாள். அவளிடம் வாழ்வில் முழுமையடைந்த திருப்தியும், அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட ஞான நிலையும் முகத்தில் குடி கொண்டிருந்தது. என்னையறியாமல் கையெடுத்து வணங்கினேன்.

துரோகம், ஏமாற்றம், பழிச்சொல், கடன் சுமை, நோய் இப்படியான காட்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் பல மாற்றங்களைச் சந்தித்து, கதாபாத்திரங்கள் ஒன்று கூடி சிரித்த முகமாகச் சுபம் சொல்வது போலத் தான் அம்மாவின் மரணமும் நிகழ்ந்தது.

கடைசி ஒரு வருடத்தில் தான் அம்மாவின் வாழ்வில் எத்தனை மாற்றங்கள், கடைசி நிமிடம் தான் எத்தனை அழகாய், அமைதியாய், கரம் பிடித்த கணவன், கொண்டு வந்த மருமகள், வாழைக் கன்றுகளாய் பேரக் குழந்தைகள், உடன் பிறந்த மூத்த சகோதரி சூழ்ந்திருக்க பெற்றெடுத்த மகன் மடியில் மரணத்தை ஏற்றுக் கொண்டாள்.

அம்மாவின் புகைப்படம் தயாராகி வீட்டிற்கு வந்தது. அம்மாவின் பேரன் கௌதம புத்தன் புகைப்படத்தை கைகளில் புடுங்கிக் கொண்டான். அந்தப் படத்தைப் பார்த்துப் பேசினான். “பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க. நல்லாயிருக்கீங்களா ?” மழலையாய் கேட்டான். உடன் இருந்த எங்கள் கண்களில் ஒதுங்கியது கண்ணீர்.

அம்மாவைப் பார்க்க வந்த ஒன்று விட்டச் சின்னம்மா உஷா சொன்னாள். “அம்மாதான் எனக்கு இரிஞ்சூர் குளத்துல குடத்தைக் கவிழ்த்து நீச்சல் கற்றுக் கொடுத்தது. நம்ம உறவுக்காரப் பெண்களிலேயே நான் பார்த்த வரைக்கும் ஈகோ இல்லாத பெண் அம்மா தான். ஏற்றத்தாழ்வு பாக்காம எல்லார்க்கிட்டயும் அன்பா பழகும் குணம் தான் அம்மாவோட தனித் தன்மை” அம்மாவைப் பற்றி சின்னம்மா வெளியிட்ட இந்த அபிப்பிராயம் தான் அவரது வாழ்க்கைக்குக் கிடைத்த சான்று.

இவ்வுலகில் வாழ்ந்த மானுடர்கள் தான் பிற்காலத்தில் வழிபடும் தெய்வங்களாக மாறினார்கள். குல தெய்வங்களாக அடையாளப்படுத்தப் பட்டார்கள்.

இனி இந்த அம்மா ராதாபாய் எனக்கும் எனது வம்சத்திற்கும் வழிபடும் தெய்வம்…. வம்ச தெய்வம்

..

ராதாபாய்
கோவிந்தசாமி – லெட்சுமி
தம்பதியரின் நான்காவது மகள்

பிறப்பு 1943

திருமணம் 1969

குழந்தைப் பேறு 1971

மரணம் 27.10.2005

வியாழக் கிழமை
நேரம்
காலை 8 மணி 8 நிமிடம்

முதல் சுவாசம்
இரிஞ்சூர் கிராமம்,  வடக்கு திசை வீடு

இறுதி சுவாசம்
புனித தோமையார் மலையடிவாரம், சென்னை, தெற்கு திசை வீடு.