Tag Archives: ஒட்ட‌ ம‌ர‌ம்

சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-7

Standard

குறிப்பு-சவ்வாது மலை வாசிகளின் வாழ்க்கைத் தொடரைப் புதிதாகப் படிப்பவர்கள் முதல் அத்தியாய‌த்தில் இருந்து தொடங்குக!

பெரியப்பணப்பாறை நோக்கிய நமது பயணம் கரடுமுரடான பாதையிலேயே சென்றது. காட்டில் பல இடங்களில் சிகப்பு வண்ணத்தில் பூத்துக் குலுங்கிய, பெரிய மரங்களைக் கண்டு கண்கள் மயங்கின. அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் அதைப் புலவமரம் என்றார். புலவமரம் தேக்குப்போல் வலிமை வாய்ந்ததாம். மர வேலைகளுக்காகுமாம். அதேபோல் மலைவாசிகள் வெள்ளரிச்செடி என ஒன்றைக் காட்டினார்கள். வெட்டுக் காயம், ஆறாத புண் ஆகியவற்றுக்கு இவ்விலையை அரைத்துக் கட்டினால் விரைந்து குணமடையுமாம்.

அடர்ந்த காட்டுக்குள் பாம்பு போல் வளைந்து நெளிந்த ஒற்றையடிப் பாதையில் நடந்த நமக்கு வெகு அருகிலேயே ஆள் உயர கரையான் புற்றுக்கள் கடந்தன. அதில் கருநாகங்கள் குடியிருக்கும் என அச்சமூட்டினார்கள். அதேபோல் மரக் கிளைகளில்  முசர என்று அழைக்கப்படும் ஒருவகை எறும்புகள் இலைகளை மடக்கி கூடுகட்டியிருந்தன. அந்த எறும்புகளுக்கு மலைவாசிகளே அஞ்சுகிறார்கள்.
ப‌ய‌ண‌த்தில் எதிரே ச‌ந்திரா என்ற‌ ம‌லைவாசிப் பெண் த‌ன் கண‌வ‌னுட‌ன் காட்டில் வெட்டியெடுத்த‌ கிழ‌ங்குக‌ளோடு வ‌ந்தார். விசாரித்த‌போது அதைக் க‌வ‌ல‌க் கிழ‌ங்கு என்றார். கொடிவ‌கையைச் சேர்ந்த‌ இக்கிழ‌ங்குத் தாவ‌ரம் ம‌ண்ணுக்குள் நீள‌ நீள‌மான‌ கிழ‌ங்குக‌ளை விடுமாம். காட்டுப் ப‌ன்றிக‌ளின் விருப்ப‌ உண‌வாம் இது. ம‌ர‌வ‌ள்ளிக் கிழ‌ங்கைவிட‌ சுவை மிகுதி என்ப‌தால் ம‌லைவாசிக‌ள் இய‌ற்கையில் கிடைக்கும் இக்கிழ‌ங்கை அவித்து உண்ணுகிறார்க‌ள்.
ச‌வ்வாது ம‌லைக‌ளில் போளூர், க‌ல‌ச‌ப்பாக்க‌ம், செங்க‌ம், வாணிய‌ம்பாடி, திருப்ப‌த்தூர், அணைக்க‌ட்டு, ஆகிய‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தொகுதிக‌ளின் எல்லைக‌ள் இட‌ம்பெறுகின்ற‌ன‌. அதில் பெரிய‌ப்ப‌ண‌ப்பாறை சிற்றூர் அணைக்க‌ட்டுத் தொகுதியைச் சேர்ந்த‌து.

குடிநீர், சாலைவ‌ச‌தி இச்சிற்றூரில் மிக‌ மோச‌ம். காலையில் பெண்க‌ள் அனைவ‌ரும் ஊற்றுநீர் எனும் ஒரு சிறிய‌ குட்டையில்தான் குடிநீர் எடுக்கிறார்க‌ள். குட்டையில் ம‌ர‌ இலைகள் வீழ்ந்து ம‌க்கி பூச்சிக‌ள் மேய்கின்ற‌ன‌. இத் த‌ண்ணீரைக் குட‌த்தின் வாயில் துணி வைத்து மூடி வ‌டிக‌ட்டித் தூக்கிக் செல்கிறார்க‌ள்.

இச்சிற்றூரில் வ‌சிக்கும் யாருக்கேனும் உட‌ல்நிலை மோச‌ம் அடைந்தால், இன்னும் சிக்க‌ல்தான். ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் இருக்கும் ந‌ம்பிய‌ம்ப‌ட்டுக்கோ, ச‌முனாம‌ர‌த்தூருக்கோ செல்ல‌ வேண்டுமெனில் டோலி, க‌ட்டித்தான் தூக்கிச் செல்ல‌ வேண்டும் என்கிறார் அவ்வூரைச் சேர்ந்த‌ ஜொள்ள‌ன்.

பெரிய‌ப்ப‌ண‌ப்பாறையை அடைந்துவிட்ட‌ நாம், அங்கிருந்து அடுத்த‌ சிற்றூரை நோக்கி செல்வ‌த‌ற்குள் இருட்டிவிடும் என்ப‌தால் அச்சிற்றூரிலேயே இர‌வு த‌ங்கினோம். லெட்சும‌ண‌ன், உண்ணாம‌லை என்ற‌ இணைய‌ரின் கூரைவீட்டு முன்புற‌த் திண்ணையில் இர‌வு த‌ங்கிக் கொள்ள‌ அனும‌தித்த‌ன‌ர். இர‌வு உண‌வாக‌ சாமை அரிசி சோறும், கோழிக் குழ‌ம்பும் வ‌ழ‌ங்கினார்க‌ள். சாமை தானிய‌த்தை அரிசியாக்கி சேமித்துக்கொள்ள‌ இய‌லாயதாம். என‌வே தேவைக்கு த‌க்க‌வாறு அவ்வ‌ப்போது உர‌லில் இட்டுக் குத்தி அரிசியாக்கிக் கொள்கின்ற‌ன‌ர்.
மலையில், மாலையே குளிரின் ராசாங்க‌ம் தொட‌ங்கிவிடுகிற‌து. இருட்டிய‌தும் குளிர் காரண‌மாக‌ ம‌க்க‌ளும் குடிசைக‌ளில் முட‌ங்கிவிடுகிறார்கள். வேக‌மான‌ காற்றால் அலைக்க‌ழிக்க‌ப்ப‌டும் ம‌ர‌க்கிளைக‌ளால் இன‌ம் புரியாத‌, அச்ச‌ம் க‌ல‌ந்த‌ ஓசை அவ்வ‌ப்போது ந‌ம் காதுக‌ளைத் த‌க்கிய‌து. அவ்வோசைக்கு வ‌லுசேர்ப்ப‌துபோல ந‌ரிக‌ளின் ஒல‌ம் திகில் ஏற்ப‌டுத்திய‌து, மற‌க்க‌ முடியாத‌ மாறுப‌ட்ட‌ இர‌வாக‌ அது அமைந்த‌து.

வெளிச்சம் தொட‌ங்கிய‌தும் பெண்க‌ள் சாணி தெளித்து, வாச‌ல் கூட்டி கோல‌ம் போட்டு வேக‌வேக‌மாக‌ ப‌ணிக‌ளைத் தொட‌ங்குகின்ற‌ன‌ர்.
பெரிய‌ப்ப‌ண‌ப்பாறையிலிருந்து காட்டு வ‌ழ‌யாக‌ கோர‌ம‌டுவு, ஜொனூர், ம‌ண்ட‌ப்பாறை வ‌ந்து அங்கிருந்து பேருந்து மூல‌ம் ச‌முனாம‌ர‌த்தூருக்கு ப‌ய‌ண‌த்தைத் தொட‌ர்ந்தோம்.
புளிய‌ ம‌ர‌ங்க‌ள் இலையா, காயா என‌ வேறுபாடு தெரியாம‌ல் ந‌ன்கு விளைந்திருந்த‌ன‌. அதே போல் ப‌லா ம‌ர‌ங்க‌ளும்… பாதை காட்டுவ‌த‌ற்காக‌ சிறுது தூர‌ம் உட‌ன் ப‌ய‌ணித்த‌ ஜொள்ள‌ன், ஒரு இலையைக்காட்டி  இது ரொம்ப‌ முக்கிய‌மான‌து என்றார். கோடாஜ‌ல்லி இலை என‌க்கூறிய‌வ‌ர் ந‌ச்சுப்பாம்பு கடித்துவிட்டால் ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்வ‌த‌ற்கு முன் இவ்விலைக‌ளை ப‌றித்துத் தின்றால் உயிர் பிழைக்க‌ இய‌லும் என்றார்.
ம‌ற்றொரு இட‌த்தில் ஒங்கி வ‌ள‌ர்ந்திருந்த‌ ஒரு ம‌ர‌த்தைக் காட்டி, இத‌ன் பெய‌ர் ஒட்ட‌ ம‌ர‌ம் என்றார்.

இத‌ன் இலைக‌ளை ப‌றித்துத் தின்றால் அல்ல‌து இவ்விலைக‌ளைக் க‌சாய‌ம் வைத்துக் குடித்துவிட்டால் இற‌ப்ப‌து உறுதி என்றார்.

அதிர்ச்சிய‌டைந்த‌ ந‌ம‌க்கு, அடுத்து பார்த்த‌தோ விய‌ப்பைத் த‌ருவ‌தாக‌ இருந்த‌து…

தொடரும்…