Tag Archives: காவலூர்

சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை!(நிறைவு)

Standard

குறிப்பு-சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கைத் தொடரைப் புதிதாகப் படிப்பவர்கள் முதல் அத்தியாய‌த்தில் இருந்து தொடங்குக!

சமுனாமரத்தூரிலிருந்து சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் மேல்நோக்கிய பயணத்திற்குப் பிறகு காவலூர் வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 2200 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இச்சிற்றூர். இங்குதான் வான்வெளி ஆய்வுமையம் அமைந்துள்ளது. கானகத் துறைக்குச் சொந்தமான சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வான்வெளி ஆய்வுமையம் முதலில் கொடைக்கானல் மலையில் தான் அமைக்கப்பட்டது. 1960-ல் அவ்வாய்வு மையத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்ற எம்.கே வைனுபாப்பு தான் சவ்வாது மலையில் வான்வெளி ஆய்வுக்கு மிக‌வும் பொருத்த‌மான‌ இவ்விட‌த்தைத் தேர்வு செய்த‌வ‌ர். வ‌ருட‌த்தில் அதிக‌ப‌ட்ச‌மாக‌ 220 இர‌வுக‌ள் வ‌ரை விண்மீன்க‌ள் ம‌ற்றும் கோள்க‌ள் தொட‌ர்பாக‌ ஆய்விற்கு உக‌ந்த‌தாக‌ இங்கு வான்வெளி அமைந்த‌தால் காவ‌லூர் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌தாம்.

இங்கு நாளும் ஆய்வுப்ப‌ணிக‌ளை மாலை ஆறு ம‌ணிக்குப் பிற‌கு தொட‌ங்குகிறார்க‌ள். குறிப்பாக‌ விண்வெளியில் உல‌வும் ப‌ல‌வித‌மான‌ விண்மீன்க‌ள் குறித்து ஆய்வுக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌. குறிப்பிட்ட‌ விண்மீன் பூமியிலிருந்து எவ்வ‌ள‌வு தொலைவில் இருக்கிற‌து? அத‌ன் வய‌து? அத‌ன் வெப்ப‌ம்? அதை சுற்றி இருக்கும் காற்று ப‌ற்றி…இப்ப‌டி ப‌ல‌ சேதிக‌ளை ஆண்டுக‌ண‌க்கில் தொட‌ர் ஆய்வு மூல‌ம் சேக‌ரிக்கிறார்க‌ள். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள‌ப்ப‌டும் குறிப்பிட்ட‌ விண்மீனுக்கு த‌னிப்பெய‌ர், எண் கூட‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இறுதி செய்ய‌ப்ப‌டும் ஆய்வ‌றிக்கை அமெரிக்காவில் உள்ள‌ ச‌ர்வ‌தேச‌ அறிவிய‌ல் ஆய்வு மைய‌த்தின் ஒப்புத‌லுக்கு பிற‌கு வெளி உல‌குக்கு அறிவிக்க‌ப்ப‌டுகிற‌து.

இவ்வாய்வுமைய‌த்தின் சாத‌னைக‌ளில் குறிப்பாக‌, உல‌க‌ அள‌வில் யுரேன‌ஸ் கிர‌க‌த்துக்கு ஒளிவ‌ளைய‌ம் இல்லை என்றிருந்த‌ ஆய்வு முடிவு த‌வ‌று என்றும், ஒளிவ‌ளைய‌ம் யுரேன‌ஸ் கிர‌க‌த்துக்கு உண்டு என்ப‌தை உறுதிப‌டுத்தியுள்ள‌ன‌ர். அதேபோல் ச‌னிகிர‌க‌த்துக்கு  ஜ‌ந்தாவ‌து ஒளிவ‌ளைய‌ம் இருப்ப‌தை இம்மைய‌மே உறுதி செய்துள்ள‌து.

ஆசிய‌ அள‌வில் மிக‌ப் பெரிய‌ தொலைநோக்குக் க‌ருவியான (2.3 மீட்ட‌ர்) 93 அங்குலம் விட்ட‌ம் கொண்ட‌ தொலைநோக்குக் க‌ருவி இங்கு அமைந்துள்ள‌து. இந்த‌ ஆய்வு மைய‌த்தை த‌ன‌து இருப‌து ஆண்டுகால‌ க‌டும் உழைப்பால் உருவாக்கிய‌ வைனு பாப்பு 1982ல் ம‌றைந்தார். அத‌ன்பின் 06-06-1986-ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் இம்மையத்திற்கு வைனு பாப்புவின் பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாய்வு மையத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு சனிக்கிழமைகளில் மட்டும் அனுமதி அளிக்கின்றனர் மாலை 6 மணி முதல் 6 அங்குல தொலை நோக்கி வழியாக விண்மீன்கள் மற்றும் கோள்களைப் பொதுமக்கள் பார்க்க வழிசெய்கின்றனர்.

சவ்வாது மலைமக்களோடு கலந்து பழகிய நமக்கு ஏற்பட்ட பட்டறிவுகள் அத்துனையும் புதிதுதான். வாழ்க்கை முறையில் மட்டுமல்லாது இற‌ப்பு சடங்குகளிலும் கூட சிறுசிறு வேறுபாடுகளைக் காண முடிந்தது. இறந்தவர் உடல்களை பெரும்பாலும் புதைக்கும் வழக்கம்தான் என்றாலும்,இறுதி சடங்கின் போது முக்கிய நிகழ்வாக உறவினர்கள் இறந்தவரின் உடலுக்கு மரியாதை செய்யும் வகையில் புத்தாடைகளை உடல் மீது போர்த்துகிறார்கள். அதேபோல் அரிசி உள்ளிட்ட தாணியங்களையும் கொட்டுகிறார்கள்.

உட‌ல் மீது போர்த்த‌ப்ப‌ட்ட‌ புத்தாடைக‌ள் அனைத்தையும் உட‌லோடு புதைத்துவிடுகிறார்க‌ள்.

ம‌லையில் பிற‌ந்து வெளி உல‌க‌மே தெரியாம‌ல் வாழ்ந்து இற‌ந்த‌வ‌ர்க‌ள் இங்கு ஏராள‌ம். குறிப்பாகப் பெண்க‌ள். இந்த‌ த‌லைமுறையில்தான் ம‌ற்ற‌ ஊர்க‌ளோடு தொட‌ர்புக‌ள் அதிக‌ரித்துள்ள‌ன‌. விர‌ல்விட்டு எண்ணும் அள‌வில் வெளிநாட்டு கூலி வேளைக்கு சென்ற‌வ‌ர்க‌ளும் உண்டாம். சென்னை வ‌ரை ப‌ய‌ணித்த‌வ‌ர்காள் ம‌லையில் அதிக‌ சேதி தெரிந்த‌வ‌ராக‌ க‌ருத‌ப்ப‌டுகிறார்.

ம‌லை எத்த‌னை அழ‌கோ, எத்த‌னை விய‌ப்போ அது போல் ம‌லையில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ளுக்கு க‌ட‌ல் விய‌ப்பையும் ஆர்வ‌த்தையும் ஏற்ப‌டுத்துகிற‌து. ஆண்க‌ள் சில‌ர் குழுவாக‌ப் புற‌ப்ப‌ட்டு சென்னை வ‌ந்து க‌ட‌லைப் பார்த்துவிட்டு, அதோடு கான்கிரீட் க‌ட்டிட‌ காடுபோல் காட்சிய‌ளிக்கும் மாந‌க‌ர‌த்தை‌யும் அத‌ன் வேக‌த்தையும் க‌ண்ட‌தை ந‌ம்மிட‌ம் க‌ண்க‌ள் விரிய‌ கூறின‌ர்.

காடுகள் தான் நாட்டு ம‌க்க‌ளுக்கு உயிர்க்காற்றையும், ம‌ழையையும் த‌ருகிற‌து எனும் அறிவிய‌ல் உண்மை அவ‌ர்க‌ளுக்கு இன்னும் முழுமையாக‌ச் சென்ற‌டைய‌வில்லை. அத்துனை பெரிய‌ காட்டில் ப‌ற‌வைக‌ள் மிக‌ அரிதாக‌வே க‌ண்ணில் ப‌ட்ட‌ன‌. காட்டின் உட்புற‌ங்க‌ளில் ப‌ய‌ணித்த‌போது கூட‌ கொடிய‌ ந‌ச்சுப் பாம்புக‌ள், பூச்சிக‌ள் குறுக்கிட்ட‌ன‌வே த‌விர‌ ம‌னித‌ன் உண்ணும் வில‌ங்குக‌ளான‌ மான், காட்டாடு, காட்டுப்ப‌ன்றி போன்ற‌வை ஒன்றுகூட‌ க‌ண்ணில் ப‌ட‌வில்லை. அந்த‌ அள‌வுக்கு அவை அழிவின் விளிம்பில் உள்ள‌ன‌. இத‌ற்குக் கார‌ண‌ம் அம்ம‌க்க‌ளுக்கு இவைக‌ளின் முக்கிய‌ம் தெரியாத‌துதான். அவ‌ற்றை தெரியப்ப‌டுத்தும் ப‌ணியை தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளும், அர‌சும் மேற்கொள்ள‌ வேண்டும்.

ச‌வ்வாது ம‌லையில் விய‌ப்பாய் பார்த்த‌ ப‌ல‌ இய‌ற்கைக் காட்சிக‌ள் நினைவில் நீங்காத‌வை. பீமம‌டு அருவி செல்லும் வ‌ழியில் வில‌ங்கு ம‌ர‌த்தின் மீது தாவிப் ப‌ட‌ர்ந்த‌ புண‌ல்கொடியைப்போல‌ சாவ்வாது ம‌லை ப‌ய‌ண‌ப் ப‌ட்ட‌றிவு நினைவுக‌ள் ந‌ம்மை இருக்க‌மாய் சுற்றிப் ப‌ட‌ர்ந்து கிட‌க்கிற‌து.

(நிறைவு)

(25-11-2007முதல் 27-1-2008 வரை களஞ்சியத்தில் தொடராக வெளிவந்தது.)