Tag Archives: கூர் எள்ளு

சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-3

Standard

 

குறிப்பு-சவ்வாது மலை வாசிகளின் வாழ்க்கைத் தொடரைப் புதிதாகப் படிப்பவர்கள் முதல் அத்தியாய‌த்தில் இருந்து தொடங்குக!

 “எதுக்கு சார் போட்டோ புடிக்கிறீங்க ?” கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார் . நமது பயண நோக்கத்தை எடுத்துரைத்தோம். அதில் நம்பிக்கை இல்லாதவராக நமது பேச்சை மறுத்தபடி கேட்டார்

“இப்படிச் சொல்லி படமெடுத்து சந்தன மரத்தை வெட்டிருக்கானுங்கன்னு போட்டு படத்த ‘பங்களாவுல’ கொடுக்கவா ?” என்றார். அவரது வினாவில் கோபம் தெரிந்தது.

நமக்கு மலைவாசியின் பேச்சு புரியவில்லை. திருதிருவென விழித்தோம். நம்மைச் சுற்றி சில மலைவாசிகள் கூடினர். அந்த நேரம் சூழ்நிலையைப் புரிந்து கொண்டவராக நம்மை நெருங்கினார் சர்க்கரைக் கவுண்டர். அவர் மலைச்சிற்றூர்கள் சிலவற்றிற்கு அன்றாடம் மலையின் அடிவாரத்திலிருந்து மிதி வண்டியில் தயிர் எடுத்து வந்து விற்பவராம். அவர் நம்மிடம் சொன்னார்

“அவுங்க பங்களான்னு சொன்னது காட்டு இலாகாவத் தான். புது முகமா இருக்கிற உங்கள தப்பாப் புரிஞ்சுகிட்டாங்க” என்றார்.

உடனே அவர்களது அச்சம் போக்கும் வகையில், எடுத்த படத்தை நமது கருவியில் இருந்து அழித்து விட்டு அதை தயிர் வணிகரிடம் தெரிவு படுத்தினோம். அவரும் நம்மை அவர்களுக்குப் புரிய வைத்து பத்திரமாக மீட்டு வந்தார். பின்னர் நம்மோடு சில சிற்றூர்களுக்கு அவரும் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் மலைவாசிகளிடம் நெருங்கிப் பேச நமக்கு உதவியாகவும் இருந்தார்.

“முன்ன அதிகமா நடந்த சந்தனக் கட்ட கடத்தல், வன விலங்கு வேட்டையானாலும், இப்ப மலையில் இருந்து அதிகமா வரும் கள்ளச்சாராய புகார்கள் காரணமாகவும் அடிக்கடி போலீசு காட்டு இலாக்காக் காரர்களின் கடும் விசாரணைக்கு அப்பாவி மலைவாசிகள் தான் மாட்டிக்கிறதால போட்டோக்காரங்களைப் பார்த்தா பயப்படுவாங்க. அதே நேரத்துல நம்பிப் பழகிட்டாங்கன்னா அன்பைப் பொழிவாங்க” என்றார் தயிர் வணிகர்.

அவர் சொல்வது உண்மை தான் என்பதை உணரும் வகையில் அதற்குப் பிறகான பயணத்தில் மலைசாதி மக்கள் பலரும் நம்பிடம் அன்பொழுகப் பேசினர் பழகினர் வீட்டிற்கு அழைத்து உபசரிக்கவும் செய்தனர். //

புளியங்குப்பம் சிற்றூர் பகுதியை நாம் கடந்து செல்லும்போது முதியவர் ஒருவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். இடுப்பில் கோவணம் மட்டும் அணிந்திருந்த அவரைப் பார்த்ததும் அழைத்தோம். நாம் நிற்கும் இடத்திலிருந்து நூறு மீட்டர் உயரத்தில் நின்றிருந்தாலும் முகம் தெரியாத நமது குரலுக்கு மறுப்பேதும் சொல்லாமல் வேக வேகமாக கீழ் இறங்கி வந்தார்.

வந்தவர் நம்மை ஏதோ கானகத் துறை அதிகாரி என கருதினாரோ என்னவோ, மிகப் பணிவோடு நமக்கு ஒரு வணக்கம் போட்டார். தமது பெயர் சின்னப்பையன் என்றும், வயது எழுபது இருக்கலாம் என்றும் கூறினார். அவரிடம் நம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதோடு, பேச்சையும் அவருடைய கோவணத்தில் இருந்தே தொடங்கினோம்.

“எங்க அப்பா காலத்துல எல்லாம் ஆம்பளைங்க கோவணம் மட்டுந்தாங்க கட்டியிருந்தாங்க. இப்ப ஒரு நாப்பது வருஷமாத் தான் எங்க ஆளுங்க எல்லாம் கால்சட்ட, மேல் சட்டன்னு ரொம்ப மாறிப் போயிட்டாங்க. இந்தக் காலப் பசங்க ஜட்டி போடறாங்க, கைலி கட்டறாங்க. கோவணம் கட்டுறதை விட்டுட்டாங்க” என்று கலாச்சார மாற்றத்தை அலுத்துக் கொண்டார்.

எங்க முன்னோர்கள் எல்லாம் தல மயிரை புதர் போல வெச்சிருந்தாங்க. பின்னாடி கொண்ட போட்டிருந்தாங்க. இப்ப நானே காலத்தப் போல மயிரை வெட்டிக்கிறேன். இப்ப உள்ளப் பசங்க சினிமாக்காரனைப் போல வெட்டிக்கிறாங்க. எங்க காலத்துல பொண்ணுங்க ரவிக்கை போட்டதேயில்லை. மேல ஒரு துண்டு மட்டும் போட்டிருந்தாங்க. இப்ப மாறிட்டாங்க” என்றார்.

அவரைத் தொடர்ந்து அடுத்து நாம் பயணத்தில் சந்தித்த சின்னக்கா என்ற மூதாட்டியும் பெண்களின் உடை சார்ந்த மாற்றங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

பெரும்பாலான மக்களின் பெயர் வெள்ளையன், வெள்ளைச்சி, சின்னப்பையன், நடுபையன், பெரியபையன், சின்னப்பிள்ளை, பெரிய பிள்ளை என திரும்பத் திரும்ப கேட்க நேர்ந்தாலும், இன்றைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் தங்கள் பெயர்களை ஆங்கில வடமொழிப் பெயர்களாகவே வைத்துள்ளனர்.

இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஜோடி ரவியும், லதாவும் தங்களது தோட்டத்தில் நாற்றங்கால் இடுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது குழந்தைகளுக்குப் பெயர் என்ன என்று கேட்டபோது வினோத் என்றனர். இந்தப் பெயரை வைப்பதற்குக் காரணம் என்ன என்று ஆர்வம் பொங்க விசாரித்த போது “கீழ் நாட்டில் போய் சோதிடம் பெயர் ராசி பார்த்து வைத்தோம்” என்றார்கள். //

அவர்களது பதிலைக் கேட்ட நமக்கு “மலை மக்களின் நாகரீகம் நம்முடைய மூட நம்பிக்கையிலிருந்து தாம் தொடங்குகிறதோ” என்ற கவலை எழுந்தது. அதிலும் குறிப்பாக திரை நட்சத்திரங்களின் பெயர்கள் தான் இப்போது அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றனவாம். நமீதா, திரிஷா போன்ற பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளன என்றார் ரவி.

உணவாக தினை, சாமை, கம்பு, கேழ்வரகு, நெல் தானியங்களைப் பயன்படுத்துகின்றனர். எள்ளில் தனித்துவமான கூர் எள்ளு என்ற ஒரு வகையைப் பயிரிட்டு அதிலிருந்தே தங்கள் தேவைக்கான எண்ணையை உருவாக்கிக் கொள்கின்றனர். அதே போல நிலக்கடலையையும் பயிரிட்டு எண்ணெய் எடுக்கின்றனர். இவற்றோடு கொள்ளு சோளம் மற்றும் மொச்சை உள்ளிட்ட நாட்டுக் காய்களும் பயிர் செய்கின்றனர்.

அதே போல், கரும்பும் சிறிய அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு முறையில் வெல்லம் காய்ச்சுகின்றனர். தென்னை மரங்கள் வீடுகளில் இப்போது தான் விரும்பி வளர்க்கப்படுவதாய்க் கூறுகின்றனர். பலாப்பழம், பப்பாளி, சீதா ,விளாம்பளம், கொய்யா உள்ளிட்ட பழவகைகள் அவர்களது வீட்டுத் தோட்டத்தில் இயல்பாய் வளருகின்றன.

இறைச்சி உணவில் மலைவாசிகளுக்கு மிகவும் விருப்பமானது பன்றி இறைச்சி தான். வீட்டுத் தோட்டங்களில் பன்றி அடைக்கத் தனிக் கொட்டகை, மாடுகள் அடைக்கத் தனிக் கொட்டகைகள் உள்ளன. அடுத்த இடத்தில் தான் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி உள்ளன. மீன் அவர்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது. கீழ் நாட்டு பயணங்களில் தான் மீன் வாங்கி வந்து சமைபதாகக் கூறுகின்றனர்.

நீண்ட நம்முடைய பயணத்துக்குத் தேவையான ஆயத்த உணவுகளைக் கையில் எடுத்துச் சென்றிருந்தாலும், ஒரு மலை முகட்டில் வைத்து விட்டு சற்றே கண் மூடியிருந்த நிலையில் குரங்குகள் சில நமது உணவுப் பையை தன் வசப்படுத்திக் கொண்டன. இச்சூழலில் பசி மயக்கம் உடல் முழுவதும் பரவ சோர்புற்ற நிலையில் சில நூறு அடிகளில் தெரியும் ஓரிரு மலைவாசிக் குடிசைகளை நோக்கி உணவுக்காக நம்மையறியாமல் நடக்கத் துவங்கினோம்.

தொடரும்…