Tag Archives: சோப்பு

சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-2

Standard

முதல் தடையைத் தாண்டி நம் பயணம் முன்னேறியது. காட்டின் அழகை குளிர்ச்சியை உணர்ந்தவாறு நாம் அடிமேல் அடியெடுத்து வைக்க நமக்கு  முன்னால் பத்தடி தொலைவில் அது நிகழ்ந்தது. அதைப் பார்த்த நமக்கு உடல் முழுதும் அச்ச அதிர்வலைகள் சில வினாடிகள் நீடித்தன.

சுமார் பத்தடி நீளமிருக்கும். கொடிய நஞ்சு நிறைந்த கரு நாகமொன்று பயணத்தில் இயல்பாய் குறுக்கிட்டதே இதற்குக் காரணம். அரிதாகி வரும் கருநாக இனம் சவ்வாது மலைக்காடுகளில் கணிசமாக உண்டு என நாம் முன்னரே அறிந்திருந்தாலும் நேரில் பார்த்ததும் சற்றுத் தருமாறத் தான் செய்தோம். இருப்பினும் இது போன்ற நிகழ்வுகள் பயண ஆர்வத்தை மேலும் தூண்டின. 33044 ஹெக்டேர் சதுரப் பரப்பளவு கொண்ட சவ்வாது மலைக்காடுகளில் அரிய பல மூலிகைகள், தாவர இனங்கள், பூச்சியினங்கள், மலர் வகைகள் பெரிய கரையான் புற்றுகள் இன்றும் நீடித்திருக்கின்றன.

சோப்பு, ஷாம்பு தயாரிப்புகளில் நுரை வருவதற்காகச் சேர்க்கப்படும் மூலப் பொருட்களில் பணிப்புங்கன் விதைகளும் உண்டு. இங்கே இந்த மரங்கள் அதிகம் தென்படுகின்றன. அதே போல் வண்ணத் தயாரிப்பு, சித்த மருந்துவத்துக்குப் பயன்படும் கடுக்கா, தாண்டிரிக்கா மரங்கள் போன்றவை அங்கிருக்கும் மலைவாசிகளின் பசி போக்குபவையாக உள்ளன.

இந்த மரங்களிலிருந்து விழும் கொட்டைகளைச் சேகரித்துத் தரும் பணியை சில மலைவாசிகள் செய்கிறார்கள். இவற்றைக் கானகக் குழு கொள்முதல் செய்து கொள்கிறது,.

இந்திய வண்ணத்துப் பூச்சிகளில் மிகப் பெரியதாக அறியப்படும் பறவையிறக்கை வண்ணத்துப் பூச்சிகளை இங்கே அக்டோபர் நவம்பர் மாதங்களில் காண முடிகிறது. அதுவும் மேல் பட்டு வசந்தபுரம் பகுதிகளில் அதிகம் தென்படும் என வண்ணத்துப் பூச்சி பற்றிய ஆய்வாளர் முனைவர் மா.வை பால சுப்ரமணியன் தெரிவித்திருந்தது நம் நினைவுக்கு வந்தது. அதே போல் முன்பு காடு முழுதும் அதிகம் காணப்பட்ட காந்தள் மலர்கள் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. மண்ணில் புதைந்திருக்கும் இந்த மலர்க்கொடியின் கிழங்குகள் மருத்துவத்திற்குப் பயன்படுவதால் சில மருந்து நிறுவனங்கள் மலைவாசிகளிடம் இக்கிழங்குகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியதிலிருந்து குறைய ஆரம்பித்துள்ளதாம்.

கார்த்திகை மாதத்தில் மலர்கின்றன காந்தள் மலர்கள். இம்மலர்ச்செடியின் கிழங்கில் காணப்படும் கொல்சிசைனே எனப்படும் நச்சுப்பொருள் ஆயுர்வேதம் யுனானி மருத்துவத்துக்குப் பயன்படுகிறதாம். இக்கிழங்கினை நேரடியாக உண்பது நஞ்சாகும், முடி உதிரும் எனத் தெரிவித்தனர். அழகு மிகுந்த இந்தக் காந்தள் மலரைத் தான் தமிழீழத்தின் தேசிய மலராக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மலைத் தொடரில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட சிறு சிற்றூர்கள் உள்ளன. சில சிற்றூர்களுக்குப் புதியவர்கள் எளிதில் செல்ல முடியாது. உரிய சாலை வசதி இல்லை. மலைத்தொடர் முழுவதும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மலைவாசிகள் சுமார் 75000 பேர் வசிக்கின்றனர்.

இவர்களில் 98 விழுக்காட்டிற்கு மேல் மலையில் விளையும் மஞ்சிப்புல் எனும் ஒருவகைப் புல்லைக் கொண்டே தங்கள் வீடுகளுக்குக் கூரை அமைத்துக் கொள்கிறார்கள். புல்லினை சீராக வெட்டிக் காயவைத்துப் பின்னர் மூங்கிலின் உதவியோடு கூரை அமைக்கின்றனர். தூக்கணாங்குருவி கூடு கட்டுவது போல் அந்தக் கூரை வேய்தலில் ஒருவகைக் கலை நயம் தெரிகிறது, இத்தகைய புல் கூரைகள் மழைக்காலங்களில் குடிசையினுள் வெப்பத்தையும் வெயில் காலங்களில் குளிர்ச்சியையும் தரத் தக்கது என்கின்றனர்.

அடுத்து மூங்கிலைப் பல வகைகளில் தங்களுடைய வசிப்பிடங்களுக்குப் பயன் படுத்துகிறார்கள். மூங்கில் பட்டைகளை உரித்து அதன் மூலம் தானியக் குதிர்களை உருவாக்குகிறார்கள்.கோழிகள் தங்குவதற்கான பரண்களையும் இவ்வகையிலேயே கட்டுகின்றனர். வீட்டுச் சுவர்களுக்கு மண் பாறை செங்கல் பயன்படுத்துகின்றனர். பல குடிசைகளின் உள்ளேயே தினை சாமை போன்ற தானியங்களை தோல் நீக்குவதற்குரிய உரலை தரையில் பதித்திருந்தனர்.

சற்று வசதி படைத்தவர்கள் தாங்கள் வசிப்பதற்கான குடிசை மட்டுமல்லாது பக்கத்திலேயே சாமி வீடு எனத் தனியே ஒரு குடிசை வைத்துள்ளனர். அதில் தங்களது முன்னோர் பயன்படுத்திய நினைவுப் பொருட்கள் அவர்களின் நினைவுநாளில் வழிபடுவதற்குரிய இடமாகவும் அதை அமைத்துள்ளனர். அதோடு அவ்வீட்டில் தங்கள் நிலத்தின் அறுவடை தானியங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் சாமி வீட்டைப் பயன்படுத்துகின்றனர்.

மலைவாசிகள் அல்லாத நம்மைப் போன்றவர்களை அவர்களது வழக்குச் சொல்லில் கீழ் நாட்டார் எனக் குறிப்பிடுகின்றனர். அத்தகைய கீழ் நாட்டாரோடு வணிக அடிப்படையில் கலந்து பழகும் மலைவாசிகள் தங்களது வீடுகளுக்கு அழைத்து உபசரித்தாலும் சாமி வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.

இப்படி நமது நமது பயணத்தில் மலைவாசிகளின் வீடுகளைத் தேடித் தேடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது இருவர் ஒரு குடிசையின் முன்பாக மரப் பலகையில் கலை வடிவம் ஒன்றினைச் செதுக்கியபடி இருந்தனர். அதை நாம் ஆர்வத்தோடு புகைப்படம் எடுக்க…

மற்றொரு குடிசையிலிருந்து நாம் படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் குரல் எழுப்பியபடி ஒருவர் ஓடிவந்தார். அவர் கையில் கூரிய ஆயுதம் இருந்தது.

தொடரும்…