Tag Archives: டி.எம்.சௌந்தரராஜன்

மீண்டும் எடுக்க வேண்டும் பட்டினத்தார் திரைப்படம்!

Standard

pattinathar temple

சென்னை திருவொற்றியூர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, பட்டினத்தார் ஆலயம்.  நீண்டகாலமாகவே செல்ல நினைத்த இடம். அண்மையில் தான் சென்று வந்தேன்.  மீனவர்கள் மிகுந்து வாழும் பகுதி என்பதால் அவர்களது தொழில் முறையான பணிகளால்…வலைகளைக் காயவைத்தல், கருவாடு தயாரித்தல் போன்றவற்றால், அப்பகுதி காற்றில் மீன் வாடை தவிர்க்க முடியாது என்றாலும், ஆலய வாளகத்தினுள் சென்றதும் அதை நம்மால் உணர இயலவில்லை. எளிமையான ஆலயம். தேங்காய்தட்டு, அர்ச்சனை போன்ற நடைமுறைகள் இல்லை. பக்தர்கள் தரும் மலர்களைப் பட்டினத்தார் மாயமான இடத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூடி, தீபம் காட்ட ஒரு பெரியவர் இருந்தார். நான் சென்றது ஒரு மாலை நேரம். வெளிப்பிரகாரத்தில் பலரும் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தனர். ஆலயத்தினுள் நுழைந்ததும் நம் உடலும் ஆன்மாவும் நல் அதிர்வுகளால் சூழப்பட்ட ஆபூர்வ உணர்வு.  மனம் அமைதியை அனுபவித்தது.  எத்தனைப் பெரிய மகான்! ஆயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன? இன்னும் அங்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறதே! எழுதும் போதே உடலில் ஒரு சிலிர்ப்பு வருகிறது.
 .
பட்டினத்தார், என்ன? ஊரார் கடன் தொல்லைக்குப் பயந்து ஓடி ஒளிந்து, சாமியார் அவதாரம் எடுத்தவரா?  இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் பிறந்த புத்தரைப் போல் செல்வச் செழிப்பான, பெரு வாழ்வில் இருந்து அத்தனையும் சட்டென தூக்கி எரிந்துவிட்டு பரதேசி கோலம் பூண்டவர்.

pattinathar

 .
கி.பி. 11ஆம் நூற்றாண்டில், அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவெண்காடர் என்ற இயற்பெயரோடு காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்பூகார்) செட்டியார் குலத்தில் பிறந்த பெருஞ்செல்வர், பட்டினத்தார். அக்காலத்து கடல்வழி வாணிபத்தில் கொடிகட்டிப் பறந்தவர். உலகின் நிலையாமையை, மகன் வழங்கிய ஒரு வாசகத்தின் மூலம் அதிர்ந்து, உணர்ந்து, கட்டிய கோவணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறிவர்.
 .
அப்படி பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம் எது? “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற வாக்கியம் தான்.  இதுக்கு என்ன அர்த்தம்? ”ஒன்னுக்கும் உதவாத உடைஞ்ச ஊசியைக்  கூட,  செத்தத்துக்கு அப்புறம், என்னோடதுன்னு எடுத்துட்டு போக முடியாது. இதுக்கு ஏம்பா இந்த அலை அலையிறீங்க?” என்பதாகவும் புரிந்துகொள்ளலாம். ’பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப கோடிகளை தூசி போல் உதறி தட்டியப்படி நடந்தவர்.
 .
பரதேசியாக உலவும் தம்பியைப் பார்த்து கௌரவக் குறைவாக கருதிய உடன்பிறந்த சகோதரி, உண்ணுகிற அப்பத்தில் விஷம் கலந்து கொடுத்தாள்…அதை ஞானத்தால் அறிந்த பட்டினத்தார், அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே வீசி “தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்’ என்று சாபமிட, சட்டென கூரை தீப்பற்றி எரிந்தது. (ஆக கௌரவக் கொலை முயற்சிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.)
 .
’துறவுப்பெற்றாலும் உனக்கு கொள்ளி வைக்க எங்கிருந்தாலும் வருவேன்’ என தாயருக்கு  கொடுத்த வாக்குபடி, தாயார் சாவு உணர்ந்து, நேராக சுடுகாடு வந்து, வாழை மட்டைகளை அடுக்கி, அதில் தாயாரின் உடலைக் கிடத்தி, மனம் உருக பாடிய பத்து பாடல்களால், சிதைக்கு தீ மூட்டியவர்.
 .
பத்திரகிரி தேசத்தில், மன்னன் வீட்டில் நடந்த ஒரு திருட்டுக்கு,  இவரைத் திருடனாக்கி கழுவிலேற்ற கட்டளையிட்டார், மன்னர். கழுமரமோ சட்டென தீப்பற்றி எரிய அலறியடித்தபடி வந்து காலில் விழுந்த பத்திரகிரி மன்னர், மன்னித்து சீடனாக ஏற்கும்படி வேண்டி, அந்த கணமே செல்வத்தையும் அரச செல்வாக்கையும் நீக்கி துறவியானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் ஒருவர். அவருடைய பாடல்கள் “மெய்ஞானப் புலம்பல்” என்று பெயர் பெற்றவை. பின்தொடர்ந்த ஓரே சீடனும் குருவுக்கு முன்பே முக்தி பெறும் பாக்கியம் பெற்றார்.
 .
வாழ்க்கையில் அமைதி, பேரானந்தமும், முடிவில் முக்தியும் பெற பட்டினத்தாரின் எழுத்துகள் ஒரு வேதபாடம். திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம், திருக்கழுக்குன்றம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் பதினோராம் சைவத் திருமுறைத் தொகுப்பில் வைத்துப் போற்றப்படுகின்றன.
 .
பட்டினத்தார் வாழ்க்கையை, இதுவரை மூன்று முறை திரைப்படங்களாக 1935, 1936 மற்றும் 1962ல் எடுக்கப்பட்டன. 1935ல் சி.எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக நடித்த படமே முதலில் வெளிவந்ததாகும். இதை லோட்டஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெற்றி பெறவில்லை. எனினும், 1936ல் எம்.எம். தண்டபாணி தேசிகர் பட்டினத்தாராக நடித்த படம் வெளியானது. இதை வேல் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. பெரும் வெற்றிக்கண்டது. இப்படத்தில் பெரும்பாலான பாடல்களை தேசிகரே இசையமைத்து, பாடியுள்ளார். மொத்தம் 52 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. கூடவே சிறப்பான நடிப்பும்…

m.m dhandapani desigar in pattinathaar film

 .
எம்.எம். தண்டபாணி தேசிகரின் பருமனான உடல்,  நாளும் ஒரு வேளை உண்டு வாழ்ந்த பட்டினத்தார் வேடத்திற்கு பொருத்தமில்லாததாக கருதப்பட்டது. எனினும் 25 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமானதாம். இப்படத்தின் தாக்கத்தால் அக்கால ஆண்கள் பலரும், துறவி போல் உடையும், தாடியும், திருநீறும் அணிந்து உலவினர்களாம்.  அத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த பட்டினத்தார் படத்தின் பிரதியோ, பதிவோ ஒன்று கூட தற்போது யாரிடமும் இல்லாதது, இன்றைய தலைமுறைக்கு பேரிழப்பாகும்.

tms in pattinathar film

 .
    பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பட்டினத்தாராக நடித்து 1962ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான், தற்போது தொலைக்காட்சியில் நாம் பார்த்துவருவது. இதில் டி.எம்.எஸ்சும் சிறப்பாகவே நடித்திருப்பார். படம் பட்டினத்தாரின் மீது பற்றுதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருந்தது. இந்த தலைமுறை பட்டினத்தாரை அறிந்திருக்குமா?  சந்தேகமே!
 .
பட்டினத்தாரைப் படிப்பவர்கள், அவர் கதைக் கேட்டவர்கள் பணம், பொருள் தேடி நாயென அலைய மாட்டார்கள். போதும் என மனம் பெறுவர். தானம் செய்வர். உலகில் பணம், பொருளைத் தாண்டிய உன்னதங்களை உணருபவர்களாக இருந்திருப்பார்கள். சமூகத்தில் அமைதி தொலைந்து போயிருக்காது. குடும்பங்களில் கொலைப் பாதகச்செயல்கள் நுழைந்திருக்காது. அவரைத் தமிழர்கள் கொண்டாடத் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
 .
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைக்குதான் உதவிக்கேட்டு ஆலயங்களில் பிராத்தனைச் செய்து, நடந்துவிட்டால் காணிக்கையும் செலுத்தும் மனோவியாதி மக்களிடம் பெருத்து நிற்கிறது. முக்தி வேண்டும்! மீண்டும் பெறவா வரம் வேண்டும்! என கேட்கும் பிரார்த்தனை நிகழ்த்துவோர் எத்தனைப் பேர்?
 .
பட்டினத்தார் பஜனை மன்றங்கள், சிறு ஆலயங்கள், திருவொற்றியூருக்கு பாடியபடி பாதயாத்திரை குழுக்கள் போன்றவை மெல்ல உருவாக வேண்டும். மீண்டும் அவர் வாழ்க்கையை திரைப்படமாக வண்ணத்தில் எடுக்க, நல்லவர்கள் முன்வரவேண்டும்.
 .
மரணத் தருவாயில் தெளிவு வந்தால் மனிதன் புலம்புவது எப்படி எனும் பட்டினத்தாரின் பாடலோடு நிறைவு செய்கிறேன்..
 .
“வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே
 .
மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே
 .
வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே
 .
ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்
காணில் நமது என்று கனம் பேசிக் கொண்டேனே
 .
ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே
 .
குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே
 .
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே
 .
பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய் என்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே
 .
கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்ல்லாம் உப்பரித்துக் கெட்டேனே
 .
எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே
 .
சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறா உடம்மை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே
 .
தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மாண்டேனே
 .
தோல் எலும்பு மாமிசமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே
 .
போக்குவரத்தும் பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம் மறுகிக் கெட்டேனே”
 .
பட்டினத்தாரைப் பயில்வோம். ஞானத்தை பட்டினத்தாரிடமிருந்து பெறுவோம்.