Tag Archives: தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவியும், டோடோ பறவையும்!

Standard

baya weaver1 copy‘தூக்கணாங்குருவிக் கூடு
தொங்கக் கண்டேன் மரத்திலே…’

1960-களில் ரொம்பவும் பிரபலமானது, இந்தப் பாடல். இன்றைக்கும் இந்த பாடல் ஒலிக்கிறது. ஆனால் பாடலில் வரும் குருவியைத் தான் அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை. இன்றைய தலைமுறையைச் சார்ந்த கிராம மக்களில் பலர் தூக்கணாங்குருவி எப்படி இருக்கும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

கருவேல், உடை, ஈச்சம், பனை போன்ற மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்கணாங்குருவிகளின் கூடு. பார்ப்பதற்கு கலையின் அடையாளமாக காட்சியாளிக்கும்.

காய்ந்த புல்லினைக் கொண்டு, தனது அலகினால் மரத்தில் தொங்கிக் கொண்டே வடிவமைக்கும். அந்த கூட்டிற்கு இரண்டு வாசல் இருக்கும். பறவை இனத்தின் சிற்பியாக விளங்கிய தூக்கணாங்குருவி இனம் வெகுவேகமாக அழிந்து வருகிறது.

அதன் அழிவுக்கு என்ன காரணம்? இயற்கை விவசாயத்திலிருந்து ரசாயன விவசாயத்திற்கு மனிதர்கள் மாறியதன் எதிர்விளைவே…இதுபோன்ற அரிய விசயங்களை நாம் இழக்க நேரிடுகிறது. வயல் வெளிகளில் தெளிக்கப்படும் வீரியமிக்க ராசாயன பூச்சிக்கொல்லிகளை உண்டு மடியும் பூச்சிப் பூழுக்களையும்,அந்த வயலில் விளைந்த நெல் மணிகளையும் உண்ட பறவையினங்கள் வேகமாக தனது ஆயுளை இழந்து வருகின்றன. மலட்டுத் தன்மை அடைகின்றன. அதன் பல முட்டைகள் குஞ்சு பொரிக்கும் தன்மையை இழந்துவிடுகின்றன.Baya_Weaver_(Female)1

மின்சார கம்பிகளில் ஒருசேர நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் அமர்ந்திருந்த காட்சியெல்லாம் இப்போது பழங்கதைகளாக போய்விட்டன. நேற்றைய தலைமுறைகள் சர்வசாதாரணமாகக் கண்டு ரசித்த பச்சைக்கிளிகள்,குயில்கள், எல்லாம் எதிர்காலத்தில் இல்லாமலே போகும் அபாயச் சூழலில் இருக்கிறது இயற்கை.

1598-ஆம் நூற்றாண்டில் மொரிசியஸ் தீவில் வந்து இறங்கிய போர்ச்சுகீசிய மாலுமிகள் ஒரு புதுவிதமான பறவை இனம் ஒன்றைக் கண்டார்கள். அப்பறவையின் மூக்கு வாத்து போலவும், உடல் கோழியைப் போலவும் இருந்ததாம். சாதாரணமாக இருபது கிலோ வரை எடை இருக்குமாம்.

அப்பறவையின் பலவீனமே யாரைக்கண்டாலும் வெகுளியாய் அருகே வந்து விளையாடும். அதன் அன்பை முட்டாள் தனமாக கருதிய மாலுமிகள் தங்கள் மொழியில் அப்பறவையை முட்டாள் பறவை என அழைத்தனர். அதாவது அதற்கு டோடோ என பெயரிட்டனர்.

Dodo2 copy   எளிதில்சிக்கிக்கொள்ளும் டோடோ பறவையை மனிதன் தனது உணவுக்காக தொடர்ந்து வேட்டையாடத் தொடங்கினான். 1681-ஆம் ஆண்டு கடைசியாக மிச்சப்பட்ட ஒரே டோடோ ப்றவையும் இறந்துபோனது.

மனிதன் கண்ணில்ப்பட்ட நூற்றாண்டுக்குள்ளாகவே, ஒட்டு மொத்த ஒரு பறவை இனமே அழிந்து போனது தான் பெரும் சோகம்.

டோடோ பறவையினம் அழிந்த பிறகுதான் இன்னொரு உண்மை சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்குப் புரிந்தது.

மொரிசியஸ் தீவில் பிரமாண்டாமாக நின்று கொண்டிருந்த ‘கல்வாரியா’ என்னும் மர இனமும் மெல்ல அழியத் தொடங்கியது. அதற்கு முக்கியக் காரணம் டோடோ பறவை கல்வாரியா மரத்தின் பழங்களை விரும்பி உண்ணக் கூடியவை. அவ்வாறு உண்டு தன் வயிற்றில் செரித்து வெளியேறும் கழிவுகளில் கலந்து விழும் கல்வாரியா மரத்தின் விதைகள் மட்டுமே காடுகள் முழுவதும் மீண்டும் முளைக்கும் தன்மையைப் பெற்றிருந்தன.

இப்படியொரு ஆச்சரிய உறவு பறவைக்கும், மரத்திற்கும் இருந்திருக்கிறது. இதை அறியாத மக்கள் டோடோ பறவையை வேட்டையாடிவிட, அதைத் தொடர்ந்து  அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கல்வாரியா மர இனமும் பெருமளவில் அழிந்தது.

calvaria-tree copy
பிற்காலத்தில் வான்கோழிகளுக்கு இம்மரப் பழங்களைச் சாப்பிட கொடுத்து, அதன் விதைகளில் சில முளைப்புத் திறனைப் திரும்பப் பெற்றன. மொரிசியஸ் தீவில் இம் மரங்கள் மீண்டும் பெருக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவாம். ஆனால் அழிந்த டோடோப் பறவையை இப்போது ஓவியங்களாகத் தான் பார்க்க இயலுகிறது.

 
இயற்கை ஒன்றுக்கொன்று நுன்னிய தொடர்பு கொண்டது. நாம் எதை அழித்தாலும் அதற்கு எதிர்விளைவு இருக்கிறது. டோடோ பறவையும், கல்வாரியா மரமும் இதற்கு உதாரணம்.

தமிழ் ஓசை-களஞ்சியம்(17-3-2006)