Tag Archives: தேனீ

சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-9

Standard

குறிப்பு-சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கைத் தொடரைப் புதிதாகப் படிப்பவர்கள் முதல் அத்தியாய‌த்தில் இருந்து தொடங்குக!

ஜோனூருக்கு அருகில்தான் நாம் அக்காட்சியைப் பார்த்தோம். வலுவான மரவேர்களுக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு பெரும்பாறை. அவ்வழியே வந்த மலைவாசி ஒருவர் அதை ஆனக்கட்டுக் கல்லு எனக் குறிப்பிட்டார். இயற்கை அமைத்த வேர்ச்சிக்கலை வியப்பாய் பார்த்து விட்டு புறப்பட சில நிமிடங்கள் பிடித்தன. அதைத் தொடர்ந்த பயணத்தில் அடுத்து பார்த்த காட்சி அதுவரை மலைப் பயணத்தில் பார்த்திடாத மிகப் பெரிய மரம்.
பல அரச மரங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருப்பது போல் வானளவு விரிந்து நின்றது. அம்மரத்திற்கு மேலும் ஈர்ப்பாய் கிளைக்குக் கிளை பெரிய பெரிய தேனடைகள். அம்மரத்தை மத்திமரம் என்றழைக்கின்றார்கள். மலைத் தேனீக்கள் இம்மரங்களில்தான் அதிகமாகக் கூடுகள் அமைக்குமாம். இப்படி சிறியதும் பெரியதுமாக மலை முழுவதும் பல வியப்புகள் நம் கண்களை அகல விரிய வைத்தன.

ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில் க‌ண்ணுக்கெட்டிய தூர‌ம் வ‌ரை பூத்துக் குலுங்கும் கூர் எள்ளுச் செடிக‌ள் விவ‌ரிக்க‌ முடியாத‌ அழ‌கு. திரைத் துறையின‌ர் பாட‌ல்காட்சிக‌ளுக்காக‌ வெளிநாடு செல்ல‌ வேண்டாம். இங்கு வ‌ந்தால் போதும். அதேபோல் வேளாண் நில‌ங்க‌ளில் இடையிடையே ப‌யிர் செய்ய‌ப்ப‌ட்டிருக்கும் த‌ண்டுக் கீரைக‌ள். இக்கீரையை உண‌வாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தைவிட‌, அதிக‌மாக‌ முற்றிய‌ அக்கீரை விதைக‌ளை வ‌றுத்து சாத‌ர‌ண‌மாக‌வும், வெல்ல‌ம் க‌ல‌ந்தும் உண்ப‌தை அம்ம‌க்க‌ள் விரும்புகின்ற‌ன‌ர். முற்றிய‌ அக்கீரையிலிருந்து விதைக‌ளைத் தாங்கியிருக்கும் ரோசா வ‌ண்ண‌ கீரைப் பூக்க‌ள் பார்க்க‌ த‌னி அழ‌கு.

ச‌வ்வாது ம‌லைக்கு ச‌முனாம‌ர‌த்தூர் ஒரு த‌லைந‌க‌ர‌ம் போல‌… இங்கிருந்து சென்னைக்கு தின‌மும் ஒரு முறை அர‌சுப் பேருந்து செல்கிற‌து. வ‌ட்டாசிய‌ர் அலுவ‌ல‌க‌ம், காவ‌ல் நிலைய‌ம், வ‌ங்கி, ம‌ருத்துவ‌ம‌னை போன்ற‌வை இங்கு உள்ள‌ன‌. வார‌ம் தோறும் திங்கட்கிழ‌மை ச‌ந்தை ந‌ட‌க்கும். ந‌ம்பிய‌ம்ப‌ட்டில் வார‌ம் தோறும் புத‌ன்கிழ‌மை ச‌ந்தை ந‌ட‌க்கிற‌து. ந‌ம‌து ப‌ய‌ண‌ம்  ச‌முனாம‌ர‌த்தூரை வ‌ந்த‌ அடைந்த‌போது, அன்று திங்க‌ட்கிழ‌மை. ப‌ல‌ சிற்றூர்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் கூட்ட‌ம் கூட்ட‌மாக‌ ச‌முனாம‌ர‌த்தூரை நோக்கி வ‌ந்துகொண்டிருந்தார்கள். ச‌ந்தை ந‌ம‌க்கும் ப‌ல‌ சுவையான‌ அனுப‌வ‌ங்க‌ளை த‌ந்த‌து.
ச‌ந்தையில் ஆய‌த்த‌ ஆடைக‌ள், கால‌ணிக‌ள், அலுமினிய‌ப் பாத்திர‌க் க‌டைக‌ள், வ‌ளைய‌ல் க‌டைக‌ள், ம‌ளிகைப் பொருட்க‌ள், காய்க‌றிக‌ள், இனிப்புக் கார‌க் க‌டைக‌ள், புகையிலை சார்ந்த‌ போதைப் பொருட்க‌ள், க‌ருவாடு, கிளி ஜோசிய‌ம் இப்ப‌டி ப‌ல‌வும் ச‌ந்தையில் இட‌ம் பெற்றிருந்த‌ன‌.

ச‌முனாம‌ர‌த்தூரில் ஏரி ஓன்று உள்ள‌து. முன்பு சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளைப் க‌வ‌ரும் வ‌கையில் ப‌ட‌குச் ச‌வாரி ந‌டைப்பெற்ற‌தாம். இப்போது நிறுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து என்றார்க‌ள். அதைத் தாண்டி சிறிது தூர‌த்தில் அருவி ஒன்று உள்ள‌து.

அப்ப‌குதியை பீம‌ம‌டு என‌ அழைக்கின்ற‌ன‌ர். அங்கு குளிப்ப‌த‌ற்கு ஏதுவாக‌ அர‌சு பாதுகாப்பு ஏற்பாடுக‌ளை செய்துள்ள‌து. அருவி செல்லும் வ‌ழியில் ம‌லைவாசி ஒருவ‌ர் செடிக‌ள் சில‌ வற்றைப் ப‌றித்துக் கொண்டிருந்தார். விசாரித்த‌போது கொள்ளுகொண்ட‌ச் செடி என்றார். வ‌யிற்று வ‌லிக்கு ம‌ருந்தாக‌ ப‌ய‌ன்ப‌டுகிறாதாம்.

ம‌லை ப‌ல‌ ம‌ருத்துவ‌ மூலிகைக‌ளை த‌ன்னிட‌ம் வெளிப்ப‌டையாக‌த் தான் வைத்துள்ள‌து. ம‌னித‌ர்க‌ள் தான் அத‌ன் இர‌க‌சிய‌ங்க‌ளை ம‌றைத்துவிட்ட‌ன‌ர். வான்வெளியில் கோள்க‌ளை ஆய்வு செய்யும் ஆசியாவின் மிக‌ப்பெரிய‌ ஆய்வு மைய‌ம் ஒன்று இம்ம‌லையில் தான் அமைந்துள்ள‌து. அம்மைய‌த்தைப் ப‌ற்றி அறிந்த நாம், அடுத்த‌ ப‌ய‌ண‌த்தை அதை நோக்கி செலுத்தினோம்…

தொடரும்…