Tag Archives: மான் வேட்டை

சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கை-8

Standard

குறிப்பு-சவ்வாது மலைவாசிகளின் வாழ்க்கைத் தொடரைப் புதிதாகப் படிப்பவர்கள் முதல் அத்தியாய‌த்தில் இருந்து தொடங்குக!


மலைப்பயணத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அம்மக்களின் வழிபாட்டுத் தலங்களையும் நம்மால் காணமுடிந்தது. பெரும்பாலும் அவர்களது தெய்வங்களுக்கு உருவங்களை வழங்கவில்லை. வெறும் கற்களை நட்டு வைத்து வழிபடுகின்றனர். சில இடங்களில் கூடுதலாக வேல்கம்புகளும் நடப்பட்டுள்ளன. அதை மலை தேவதைகளை மலை காளி எனக் குறிப்பிடுகின்றனர். கன்னிகள் என்று அழைக்கப்படும் மலை தேவதைகளுக்கு மட்டும் சுடு மண்ணால் குதிரை, பெண் உருவங்கள் செய்யப்பட்டு சில இடங்களில் வழிபாட்டில் உள்ளது. பெரும்பாலும் கோயில் என்று தனியே கூரை அமைப்பையோ, கட்டிட அமைப்புகளையோ அங்கு பார்க்க இயலவில்லை.

மலை சாதியினரின் உட்பிரிவாக இருக்கும் வெள்ளாயர் தங்கள் வழிபாட்டை தம்பரான் கும்புடுரோம் என்கின்றனர். சின்னாணுகவுண்டர் பிரிவினர் சாமி கும்புடுரோம் என வழக்கில் பேசுகின்றனர்.

வேளாண்மைப் பணிகள் தொடங்குகிற பொழுதும், அறுவடைக்கு முன்பாகவும் மலை தேவதைகளுக்கு ஆடு அல்லது கோழி பலியிட்டு வழிபடும் வழக்கமுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை மாதத்திலிருந்து வைகாசிக்குள் மலை சிற்றூர்கள் தோறும் தங்கள் ஊர்க் கோயில் திருவிழாவை வைத்திக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு ஊர்க் கட்டமைப்புகளிலும் நாட்டார், ஊரான் என்ற பொறுப்புகளில் அவர்களுக்குள் சமூக தலைவர்களை உருவாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் அம்மக்கள் அதிகம் மரியாதை தருவது ஊர்க் கோயில் பூசாரிக்கே. எல்லா சிற்றூர்களுக்கும் தனித்தனிப் பூசாரிகள் இருப்பதில்லை. பல சிற்றூர்களுக்கு ஒரு பூசாரியே குறி சொல்லும் சூழலும் உள்ளது.
 
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ஊர் நாட்டார் தலைமையில் கூட்டம் போடும் சிற்றூர் மக்கள் திருவிழாத் தொடர்பாக முடிவெடுத்து பூசாரியிடம் கூறுகின்றனர். பூசாரி தெய்வத்துக்கு முன்னால் சிறப்பு வேண்டுதலுக்குப் பிறகே வேட்டைக்கான அனுமதி தருவார். இதையடுத்து சிற்றூர் மக்கள் வேட்டைக்குப் புறப்பட வேண்டும். பூசாரி முன்னரே குறிப்பிட்ட திசையை நோக்கி வேட்டைக்குச் செல்லுமாறு தெய்வ கட்டளையாக வழிகாட்டுவார். அந்த வழியில் செல்லும் அவர்கள் பல நாட்கள் கூட விடாது வேட்டையை தொடர்வது உண்டாம். வேட்டையில் மான் கிடைக்க வேண்டும். மான் கிடைத்தால் மட்டுமே திருவிழா நடைபெறும். கிடைக்காத நிலையில் திருவிழாவிற்கு தெய்வ அனுமதி இல்லை என அம்மக்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

 மான் வேட்டை சட்டச் சிக்கலுக்கு வழிவகுக்க கூடியது என்பதால் நம்மிடம் பேசிய மலைமக்கள் யாரும் வேட்டை தொடர்பான வாக்குமூலம் தர முன்வரவில்லை. ஆனால் இதுதான் அங்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை அவர்கள் பேச்சின் மூலம் நம்மால் உணர‌ முடிந்தது, என்றாலும் அவர்கள் இறுதிவரை இப்போதெல்லாம் வேட்டைக்குச் செல்வதில்லை என்று மறுப்பதில் கவனமாக இருந்தனர்.
பத்து நட்கள் குறைவில்லாமல் நடைபெறும் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகளுக்கு முக்கிய இடம் தருகிறார்கள். ஆதோடு சிற்றூர் இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக எருது கட்டு என்னும் நம்முடைய ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வு நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளில் மந்தை வெளியில் ஜால மரத்தில் செதுக்கப்பட்ட அலங்காரப் பந்தல் கால்களை நட்டு பந்தலிடுகின்றனர்.அந்த பந்தலுக்குள் ஊர் பொதுவில் விளக்கேற்றி, படையலிடுகின்றனர்.அன்றைய தினம் சைவ உணவையே படையலாக வைக்கின்றனர்.

இத்தகைய ஊர் திருவிழாவைத் தவிர்த்து தீபாவளி உள்ளிட்ட எந்த இந்துமத பண்டிகைகளோ, நாள் நட்சத்திரங்களையோ அவர்கள் கொண்டாடுவதில்லை, வழிபடுவதில்லை. பொங்கல் பண்டிகையும் அப்படியே. திருவிழா காலம் தவிர்த்து ஆண்டின் பிற நாட்களில் தனிப்பட்ட முறையில் பூசாரியை தங்கள் வீடுகளுக்கு அழைத்து காணிக்கை தந்து சிறப்பு பூசை செய்து தேவதைகளின் அருளைப் பெறும் வழக்கம், அம்மக்களிடம் இருக்கிறது. அப்படி , செம்பில்லி சிற்றூரில் ஒரு வீட்டிற்கு சிறப்பு பூசை செய்ய சென்றுகொண்டிருந்த பூசாரி குப்புசாமி மற்றும் அவரது உதவியாளார் நடு பையன் ஆகியோரை சந்தித்தோம். ஒரு இரும்பு பெட்டிக்குள் பூசைப் பொருட்களும் கையில் ஒருவாளுமாக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் பெட்டிக்குள் இருக்கும் பூசைப் பொருட்களை காட்ட மறுத்து விட்டார்கள். நமது பயணம் சமுனாமரத்தூரை வந்து அடைவதற்கு முன் பார்த்து வியந்தது என்ன தெரியுமா? 

தொடரும்…